கவனத்தை திசை திருப்புகிறது! இந்தியா கொடுத்த பதிலடி!

Photo of author

By Hasini

கவனத்தை திசை திருப்புகிறது! இந்தியா கொடுத்த பதிலடி!

பாகிஸ்தானில் பகதுன்க்வா மாகாணத்தில் புதிதாக காசு தாம் என்ற அணை கட்டும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. அந்த வேலைகளில் ஈடுபட்டு வரும் சீனப் பொறியாளர்கள் மற்றும் ராணுவத்தினரை அங்கிருந்து ஏற்றிக்கொண்டு கடந்த மாதம் 14ஆம் தேதி ஒரு பேருந்து சென்றது. அந்த பேருந்து சென்றபோது திடீரென ஒரு இடத்தில் குண்டு வெடித்து பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்து பெரும் விபத்துக்குள்ளானது.

அந்தக் கோரமான விபத்தில் 9 சீனப் பொறியாளர்கள் உட்பட பதிமூன்று பேர் உயிரிழந்தனர். அந்த வெடிகுண்டு தாக்குதல் காரணமாக,பேருந்து விபத்து ஏற்பட்டதாக பாகிஸ்தான் அரசு குற்றம் சாட்டியது. விபத்தை அடுத்து சீன விசாரணை அதிகாரிகள் பாகிஸ்தானுக்கு விரைந்து வந்து சம்பவ இடத்தில் விசாரணை துரித படுத்தினார்கள். தற்போது அந்த விசாரணை முடிந்த நிலையில், பாகிஸ்தானின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி செய்தியாளர்களுக்கு ஒரு பேட்டியை அளித்துள்ளார்.

அதன் மூலம் அவர் கூறும்போது பேருந்தின் மீது தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்றும், இந்த தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தானில் தான் சதித்திட்டம் தீட்டியது என்றும், கூறியுள்ளார். மேலும் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் ஆப்கானிஸ்தானில் இருந்து தான் கடத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த தாக்குதலின் பின்னணியில் இந்தியாவின் ரா உளவு அமைப்பும், ஆப்கானிஸ்தானின் தேசிய பாதுகாப்பு இயக்குனரகமும் உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

அந்த இரு அமைப்புகளுக்கு இடையே ரகசிய தொடர்பு உள்ளது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். தற்கொலை தாக்குதலுக்கு பின்னணியில் இந்தியா இருப்பதாக பாகிஸ்தான் அபாண்டமாக குறை கூறியுள்ள நிலையில், இந்தியா இந்த விவகாரத்தில் தக்க பதிலடி கொடுத்துள்ளது. இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை மற்றும் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி கூறுகையில், தாசு விவகாரத்தில் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி அபத்தமான கருத்துக்களை கூறுவதை நாங்கள் பார்த்து கொண்டுதான் உள்ளோம்.

இந்தியாவுக்கு எதிராக அவதூறு பரப்ப நினைக்கும், பாகிஸ்தானின் மற்றொரு முயற்சிதான் இது. மேலும் பயங்கரவாதிகளுக்கு புகலிடம் கொடுப்பது மற்றும் பிராந்திய நிலையற்ற தன்மையில் முக்கிய பங்கு வகிக்கும் பாகிஸ்தான், சர்வதேச கவனத்தை திசை திருப்பும் நோக்கில் இத்தகைய கருத்துக்களை தொடர்ந்து வெளியிடுகிறது என்று பதிலடி கொடுத்துள்ளார்.