19 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு குடற்புழு மாத்திரை விநியோகம்: சுகாதாரத் துறை அமைச்சர்!
குழந்தைகள், சிறார்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் பணியை சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் நேற்று தொடங்கி வைத்தார்.
தேசிய குடற்புழு நீக்க வாரத்தையொட்டி, குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள கஸ்தூரிபா காந்தி தாய்சேய் மருத்துவமனையில் நேற்று நடைபெற்றது. சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் இந்த முகாமை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் சி.விஜயபாஸ்கர்,
தேசிய குடற்புழு நீக்க நாள் ஆண்டுதோறும் பிப்ரவரி 10 மற்றும் ஆகஸ்ட் 10 ஆகிய தேதிகளில் கடைபிடிக்கப்படுகிறது. இந்த 2 நாட்களிலும் நாடு முழுவதும் 19 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், சிறார்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படுகிறது.
கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு குடற்புழு நீக்க முகாம் செப். 14ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை 3 சுற்றுகளாக தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது. முதல் சுற்று 14ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரையும், 2-வது சுற்று 21ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரையும், விடுபட்ட குழந்தைகளுக்கான சிறப்பு முகாம் வரும் 28ஆம் தேதியும் நடைபெற உள்ளது. குழந்தைகளுக்கு இந்த மாத்திரையை வழங்குவதன் மூலம் குடற்புழுக்கள் முற்றிலுமாக நீக்கப்பட்டு, ரத்த சோகை, ஊட்டச்சத்து குறைபாடு தடுக்கப்படும் என்று கூறினார்.
இந்நிகழ்ச்சியில், சுகாதாரத்துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம், மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு, மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநர் குருநாதன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.