தர்பார் நஷ்டப் பிரச்சனை:ரஜினியை விட்டு முருகதாஸை பிடித்த விநியோகஸ்தர்கள்!
தர்பார் படத்தின் நஷ்டம் குறித்து விளக்கம் அளிக்க ரஜினியைத் தொடர்பு கொள்ள முயன்று அது முடியாததால் இப்போது இயக்குனர் முருகதாஸை குறிவைத்துள்ளனர் விநியோகஸ்தர்கள்.
பெரிய எதிர்பார்ப்புடன் ஜனவரி 9 ஆம் தேதி வெளியான தர்பார் முதல் நாளிலேயே எதிர்மறை விமர்சனங்கள் பெற்றதால் கூட்டம் குறைய ஆரம்பித்தது. முதல் நாளின் மாலை மற்றும் இரவு காட்சிகளில் டிக்கெட்கள் சர்வ சாதாரணமாகக் கிடைக்க ஆரம்பித்தது. இதனால் முதல்நாள் வசூல் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என சொல்லப்படுகிறது. இத்தனைக்கும் சிற்ப்புக்காட்சியின் டிக்கெட் விலை 1000 ரூபாயில் இருந்து 3000 ரூபாய் வரை விற்கப்பட்டது. இது அனுமதிக்க பட்ட விலையை பல மடங்கு அதிகமாகும்.
இந்த படத்தை அதிக விலை கொடுத்து வாங்கி வெளியிட்ட சில விநியோகஸ்தர்கள் மிகப்பெரிய அளவில் நஷ்டம் அடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனைத் தங்களால் தாங்கிக் கொள்ள முடியாது என்பதால் விநியோகஸ்தர்கள் அனைவரும் கூட்டம் போட்டு நஷ்ட ஈடு பெறுவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதாக சொல்லப்படுகிறது. இதன் முதல் கட்டமாக ரஜினியை அவர் வீட்டில் சந்தித்து நஷ்டம் சம்மந்தமாக விளக்கம் அளிக்க அவர்கள் முயன்றனர். ஆனால் ரஜினி அதற்கு சம்மதிக்காததால் அத்திட்டம் தோல்வியில் முடிந்தது.
அதன் பின் நட்புரீதியாக இயக்குனர் ஏ ஆர் முருகதாஸை சந்தித்து முறையிட அவர்கள் முயல, அவரும் விநியோகஸ்தர்களை சந்திக்க மறுத்தார். அதோடு நில்லாமல் காவல்துறையில் புகார் அளித்தார். அங்கு நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்றதும் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து பாதுகாப்புக் கோரினார். இது விநியோகஸ்தர்களுக்குக் கடுமையான கோபத்தை வரவைக்கவே முருகதாஸுக்கு எதிராக போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர். அந்த போஸ்டரில் ‘சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து இயக்குனர் A R முருகதாஸ் இயக்கிய தர்பார் திரைப்படத்தில் பல கோடி நஷ்டமடைந்து நீதி கேட்டு தார்மீக அடிப்படையில் அலுவலகம் வந்த விநியோகிஸ்தர்களை காவல் துறையை விட்டு அவமானப்படுத்திய இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸே மன்னிப்பு கேள்’ எனத் தெரிவித்துள்ளனர். இதனால் தர்பார் விவகாரம் இப்போது ரஜினியை விட்டு முருகதாஸ் பக்கம் திரும்பியுள்ளது.