மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டத்தில் கலந்து கொள்ளாத தொழிலாளர் துறை உதவி ஆணையர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க விருதுநகர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு. மேலும் பொதுமக்களின் மனுக்கள் மீது மூன்று நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று அனைத்து துறை அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பொது மக்களின் பல்வேறு வகையான கோரிக்கை குறித்த மனுக்கள் பெறப்பட்டன.
மேலும் பொதுமக்களிடம் பெற்ற மனுக்கள் அந்தந்த துறை அலுவலர்களிடம் வழங்கப்பட்டு அதற்கு தீர்வு காண மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார்.
மேலும் கடந்த வாரங்களில் பெறப்பட்ட பொதுமக்களின் மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் மாவட்ட ஆட்சியர் விசாரணை மேற்கொண்டார்.
அதில் 70 சதவீதமான மனுக்களுக்கு உரிய பதில் இல்லாமல் இருந்தது. இதை அறிந்த மாவட்ட ஆட்சியர் துறை அதிகாரிகளை கடுமையாக எச்சரிக்கை செய்தார். பொது மக்களின் புகார் மனுக்கள் மீது மூன்று நாட்களுக்குள் உரிய விசாரணை செய்து அறிக்கை தர வேண்டும் எனவும், தவறும் பட்சத்தில் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.
இந்த நிலையில் இன்று பெறப்பட்ட ஒரு மனு மீது விசாரணை நடத்த தொழிலாளர் துறை உதவி ஆணையரை அழைத்த போது அவர் இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டத்தில் பங்கேற்காதது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து அந்த அதிகாரி மீது 17 பிரிவின் கீழ் நடவடிக்கை எடுத்து மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் உத்தரவிட்டார்.