காடுவெட்டி குருவுக்கு மாலை அணிவித்த உதயநிதியால் திமுக கூட்டணியில் விரிசல்?
பாமகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரும்,வன்னியர் சங்க தலைவருமான முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி குருவின் படத்திற்கு உதயநிதி ஸ்டாலின் மாலை அணிவித்ததால் கூட்டணி கட்சியான விசிக மற்றும் திக தொண்டர்கள் கடும் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.
திராவிட முன்னேற்றக் கழகம் எப்பொழுதும் முற்போக்கு தனமாகவும், கடவுள் மறுப்பு,சாதி மறுப்பு போன்ற கொள்கைகளை கொண்ட இயக்கமாகும்.ஆனால் தேர்தல் வந்தால் மட்டும் இவர்களின் கொள்கைகளை ஓரம் கட்டிவிட்டு திமுக வெற்றி பெற வேண்டும் என்பதற்காக எந்த லெவலுக்கு வேண்டும் என்றாலும் செல்வார்கள்.சாதி பாகுபாடுகளை அறவே எதிர்க்கும் திமுகவானது தேர்தல் வந்தால் எந்த தொகுதியில் எந்த சாதியினர் அதிகம் உள்ளார்களோ அவர்களுக்கேஅக்கட்சியின் சார்பில் சீட் கொடுக்கப்படுவது வழக்கமாகிறது.
இப்படி தான் கொண்ட கொள்கையில் முன்னுக்கு பின் முரணாக செயல்படுவது தான் திராவிட முன்னேற்றக் கழகம்.அந்த பாணியில் தொடர்ந்து கலைஞர் அவர்களையும் திமுகவில் உள்ள மிக முக்கிய தலைவர்களையும் மிகவும் மோசமாக பல மேடைகளில் விமர்சித்தவர் தான் மறைந்த முன்னாள் வன்னிய சங்க தலைவர் திரு காடுவெட்டி ஜெ.குரு என்பவர்.இரண்டு முறை எம்.எல்.ஏ ஆக இருந்தவர். பாமகவினரால் கொண்டாடப்படும் மிக முக்கியமானவர்களில் இவரும் ஒருவர். கலப்பு திருமணங்களை அறவே எதிர்த்தவர் மற்றும் சாதிக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்.மேலும் இவர் மேல் உள்ள வழக்குகளில் 42 வழக்குகள் திமுகவால் போடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆரம்பம் முதலே திமுகவாலும் கடுமையாக எதிர்க்கப்பட்ட நபர்க்கு திடீரென உதயநிதி மாலை அணிவித்துள்ளார்.இது அரசியல் வட்டாரங்களில் பேசும் பொருளாக மாறியுள்ளது.அதாவது 2021 சட்டமன்ற தேர்தல் நெருங்குவதால் அரியலூரில் பிரச்சாரத்திற்கு சென்ற உதயநிதி அவர்கள் காடுவெட்டி கிராமத்தில் உள்ள மறைந்த முன்னாள் வன்னிய சங்க தலைவர் ஜெ.குருவின் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார்.அவருடன் ஜெ. குருவின் மகன் கனலரசன் உடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உதயநிதியின் இந்த செயலை பாமகவின் வழக்கறிஞர் பாலு அவர்கள் கடுமையாக கண்டித்துள்ளார்.அவர் கூறியதாவது தேர்தல் வரும்போதெல்லாம் திமுகவுக்கு வன்னியர் சமூகம் மேல் அக்கறை வந்துவிடுகிறது. “தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில்”, ஐந்து மாதங்களுக்கு மேலாக திருச்சி மத்தியச் சிறையில் குருவை அடைத்து வைத்து கொடுமைப்படுத்தியதும் இவர்கள் தான். உயிருடன் இருந்தபோது, கொடுமைப்படுத்திவிட்டு, இன்று போய் மலர் வளையம் வைக்கிறார்கள். குரு இறந்த போது, திமுக பிரநிதியாக ஒருவர் கூட வந்து பார்க்கவில்லை. மலர் வளையமும் வைக்கவில்லை. இன்றைக்கு மட்டும் அவர்களுக்கு எங்கிருந்து அக்கறை வந்தது? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில் ஜெ.குருவின் மகன் கனலரசன் பாவம் அரசியல் தெரியாதவர்,அவருடைய அப்பா எப்படி வாழ்ந்தார், எந்த சித்தாந்த்தை நோக்கி பயணித்தார், எதை எதிர்த்துப் போராடினார் என்பதை அந்தத் தம்பி மறந்துவிட்டார். பல அரசியல் தலைவர்களை காணாமல் செய்த திமுகவினர் தேர்தலுக்குப் பின்னர் கனலரசனையும் விட்டு விடுவார்கள்’’ என்றார்.
இது ஒருபுறம் இருக்க மறுபுறம் உதயநிதியின் இந்த செயலுக்கு திக,திமுக மற்றும் விசிக தொண்டர்கள் கடும் அதிருப்தியில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.சாதி கட்சி தலைவர்களுக்கு ஏன் திமுக சார்பாக மாலை அணிவிக்க வேண்டும் என்றும், குருவின் மகன் கனலரசனை வளர்த்து விட்டால் அவர் அப்பாவை போல் நமக்கு எதிரியாக தான் வருவான் என்றும் திமுக தலைமைக்கு நிர்வாகிகள் எச்சரித்துள்ளார்களாம்.
அதே போல் கனலரசனை ஆதரித்தால் திமுக – விசிக கூட்டணியில் விரிசல் கூட ஏற்படலாம் என்றும் விசிக கட்சி வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறதாம்.அதே நேரத்தில் வட மாவட்டங்களில் பலமாக உள்ள வன்னியர் மக்களின் ஓட்டுகளை கவர தான் திமுக இதுபோன்ற நாடகங்களை நடத்தி வருகிறது என்று அரசியல் ஆலோசகர்கள் கூறி வருகிறார்கள்.