அரசின் மணல் ஜல்லியை அபேஸ் செய்த திமுக கவுன்சிலர்!! பொதுமக்களிடம் வசமாக சிக்கிய திருட்டு கும்பல்!!
சேலத்தில் ஆரம்ப சுகாதார நிலைய கட்டுமான பணிக்காக கொட்டி வைக்கப்பட்டிருந்த ஜல்லி மணலை திருடியதாக பொதுமக்கள் கொடுத்த புகாரின் மீது திமுக கவுன்சிலர் மற்றும் அவரது கணவர் உள்பட நான்கு பேர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
சேலம் மாநகராட்சி 47 வது கோட்டத்திற்குட்பட்ட பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டு வருகிறது இதற்காக ஜல்லி, மணல் செங்கல் உள்ளிட்டவற்றை அப்பகுதியில் கொட்டி வைத்திருந்தனர். அதனை 47வது கோட்டத்தின் திமுக கவுன்சிலரான புனிதாவின் கணவர் சுதந்திரம் திருடி சென்றதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கேட்டபோது அவர்கள் மீது காவல் நிலையத்தில் சுதந்திரம் புகார் கொடுத்ததாகவும் அதன்மீது விசாரணை நடத்தாமல் போலீசார் வழக்குபதிவு செய்ததாகவும் குற்றம்சாட்டப்படுகிறது. இந்தநிலையில் அப்பகுதியை சேர்ந்த நவமணி என்ற பெண் செவ்வாய்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் பிறகு நடவடிக்கை இல்லாத நிலையில் நவமணி மற்றும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் காவல் நிலையத்திற்குள் சென்று முற்றுகை போராட்டம் நடத்தினர். இதனையடுத்து திமுக கவுன்சிலர் புனிதா, அவரது கணவர் சுதந்திரம், புனிதாவின் தந்தை துரை, துரையின் சகோதரி தாமரைச்செல்வி ஆகிய 4 பேர் மீதும், தகாத வார்த்தையில் திட்டியது, கொலை மிரட்டல் விடுத்தது, திருட்டு, பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.