சொன்னதை செய்த திமுக! வாக்குறுதியை காப்பாற்ற தவறிய அதிமுக – திருமாவளவன் விமர்சனம் 

0
110
Thirumavalavan
Thirumavalavan

விழுப்புரம் எம்.பி மற்றும் விசிக பொதுச்செயலாளர் துரை.ரவிக்குமார் அவர்களின் மூத்த சகோதரர் நடேசன் (வயது 92) புதுச்சேரி லாஸ்பேட்டை அவ்வைநகரில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று காலமானார். அவரது மறைவுக்குப் பின்னர் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “திமுக பொதுக்குழு தமிழ்நாட்டு அரசியலில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகவே பார்க்கப்படுகிறது.கடந்த நான்கு ஆண்டுகளில் அனைத்து தரப்பினரிடமும் நம்பிக்கையைப் பெறும் வகையில், முதலமைச்சர் ஸ்டாலின் பல திட்டங்களை தொடங்கி வெற்றிகரமாக செயல்படுத்தி இருக்கிறார்.இதனால் 2026 தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மாபெரும் வெற்றி பெறும்” என்றார்.

வாக்குறுதி காப்பாற்றாத அதிமுக

அவரது பேச்சில் முக்கியமாக,“நடிகர் கமலுக்கு கூட்டணியில் அளித்த உத்தரவாதத்தின் அடிப்படையில் ராஜ்யசபா இடத்தை திமுக தலைவர் நேர்மையாக வழங்கிய வாக்குறுதியை காப்பாற்றி விட்டார். ஆனால் அதிமுக, தேமுதிகவிற்கு கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றவில்லை என்பது வருத்தமான விஷயம். மக்கள் இதை கண்காணித்து வருகிறார்கள்,” என்றும் தெரிவித்தார்.

அத்துடன்,“விசிக எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்பதை தேர்தலுக்கான பேச்சுவார்த்தை நேரத்தில் முடிவு செய்வோம். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் திருச்சி பேரணிக்குப் பிறகு நிர்வாக மறுசீரமைப்பு துவங்கப்படும்,”என்றும் கூறினார்.

பாமக எங்கள் போட்டியல்ல!

பாமக நிலைபாடுகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த திருமாவளவன்,“பாமக – விசிக இடையே போட்டி என்றே இல்லை. அங்கெ நடப்பது அவர்கள் உட்கட்சி விவகாரம். நாங்கள் வேறு களத்தில் பயணிக்கிறோம். எங்கள் பாதையும், நியாயமும் வேறுபட்டவை. பாமக திமுக கூட்டணியில் வந்தால் விசிக ஆதரிக்குமா என்பது தற்போது தேவையற்ற யூகமான கேள்வி அதற்கு இப்போ பதிலளிக்க தேவையில்லை என்று கூறினார்.

Previous articleகருணாநிதியை பாத்துக் கத்துக்கோங்க.. குடும்ப அரசியலை கையாள தெரியாத ராமதாஸ்!!
Next articleபள்ளி மாணவர்களுக்கு அடித்த ஜாக்பாட்…மாதம் 1500 பெறுவது எப்படி!தமிழ்நாடு அரசு சொன்ன குட் நியூஸ் இதோ!