லோக்சபாவில் திமுக நடத்திய நாடகம்! கூட்டணி கட்சிகளே கழுவி ஊற்றும் கேவலம்

Photo of author

By Ammasi Manickam

லோக்சபாவில் திமுக நடத்திய நாடகம்! கூட்டணி கட்சிகளே கழுவி ஊற்றும் கேவலம்

பாஜக தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்ட திருத்த மசோதா மீதான எந்த வாக்கெடுப்பிலும் திமுக பங்கேற்காமல் லோக்சபாவிலிருந்து வெளிநடப்பு செய்தது கூட்டணி கட்சிகளிடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நேற்று காலை லோக்சபாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை அறிமுகம் செய்தார். அதற்கு காங்கிரஸ் கட்சியானது மிக கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது.

அப்போது பேசிய காங்கிரஸ் கட்சியின் கூட்டணி கட்சியான திமுக எம்.பி. டி.ஆர்.பாலு, இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க மறுக்கும் இந்த மசோதாவை கடுமையாக எதிர்க்கிறோம் என ஆவேசமாக கூறினார். மேலும் இதனையடுத்து திமுக எம்.பிக்கள் அனைவரும் வெளிநடப்பு செய்வதாகவும் கூறினார். இது குறித்து திமுகவின் அதிகாரப்பூர்வ செய்திக் குறிப்பிலும் அவர்கள் வெளிநடப்பு செய்ததாக பதிவு செய்துள்ளனர்.

பிறகு இம்மசோதாவை அறிமுகம் செய்வது தொடர்பான நடைபெற்ற வாக்கெடுப்பில் திமுக சார்பாக எம்பிக்கள் யாரும் பங்கேற்கவில்லை. இதனால் குடியுரிமை திருத்த மசோதாவை அறிமுகம் செய்ய எதிர்ப்பு தெரிவித்த எம்.பி.க்கள் எண்ணிக்கை மொத்தமாக 82 ஆக மட்டுமே இருந்தது. திமுகவின் எம்.பிக்கள் அனைவரும் ஒட்டு மொத்தமாக வாக்களித்திருந்தால் இந்த மசோதாவை எதிர்க்கும் எம்.பிக்கள் எண்ணிக்கை 100 க்கு மேல் தாண்டியிருக்கும்.

இதன் பின்னர் இந்த மசோதா குறித்து நடைபெற்ற விவாதத்தின் போது திமுக எம்.பி. தயாநிதி மாறன், உள்துறை அமைச்சர் அமித்ஷாவை மிகவும் கடுமையாக விமர்சித்து பேசினார்.

சாடிய தயாநிதி மாறன்

பின்னர் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்க, மசோதாவை நிறைவேற்ற நள்ளிரவில் வாக்கெடுப்பு நடைபெற்றது. அப்போதும் இந்த மசோதாவுக்கு எதிராக வெறும் 80 எம்.பி.க்கள் மட்டுமே வாக்களித்தனர். இவ்வாக்கெடுப்பிலும் திமுக சார்பாக எந்த எம்பிக்களும் பங்கேற்கவில்லை என்று தான் கூறப்படுகிறது.

இவ்வாறு மத்திய அரசு கொண்டு வரும் குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை மிகவும் கடுமையாக எதிர்ப்பதாக வெளிப்படுத்திக் கொள்ளும் திமுக, லோக்சபாவில் இதற்காக நடத்தப்பட்ட வாக்கெடுப்புகளில் ஏன் பங்கேற்கவில்லை? என்கிற கேள்வி அதன் கூட்டணி கட்சிகளிடையே எழுந்துள்ளது.

மேலும் திமுகவை சேர்ந்த எம்பிக்கள் குழு அண்மையில் திடீரென பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை உள்ளிட்டோரை சந்தித்து பேசியது கூட்டணி கட்சிகளிடையே சந்தேகத்தை கிளப்பியுள்ளது.

திமுக எம்பிக்களின் இந்த சந்திப்புக்குப் பிறகு தான் இப்படி ஒரு நாடகத்தை திமுக நடாத்தியுள்ளதா? என்கிற கேள்வியை கூட்டணி கட்சி தலைவர்கள் முதல் அரசியல் பார்வையாளர்கள் என அனைவரும் எழுப்பியுள்ளனர். சமூக வலைதளங்களிலும் திமுகவின் இந்த இரட்டை நிலைப்பாடு நாடகம் கடும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.