மூன்று மாதங்களுக்கு முன்பு கொடுக்கப்பட்ட ஒரு புகாரை அதிகாலையில் தூசு தட்டி எடுத்து திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதியை கைது செய்துள்ளதாக அதிமுக அரசு மீது திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாற்றியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது.
மூன்று மாதங்களுக்கு முன்பு கொடுக்கப்பட்ட ஒரு புகாரை அதிகாலையில் தூசு தட்டி எடுத்து திராவிட முன்னேற்றக் கழக அமைப்புச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. ஆர்.எஸ். பாரதி அவர்களை வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் முதலமைச்சர் எடப்பாடி திரு. பழனிசாமி கைது செய்திருப்பதற்கு, தி.மு.க. சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சென்னை – ‘அன்பகம்’ உள்ளரங்கத்தில் பேசியதாக ஒரு சர்ச்சையை எழுப்பி – அது தொடர்பாக திரு. ஆர்.எஸ்.பாரதி அவர்கள் உரிய விளக்கம் அளித்து – மனப்பூர்வமான வருத்தமும் தெரிவித்துள்ள நிலையில், இந்த “அராஜக நடவடிக்கை” எடுக்கப்பட்டுள்ளது. இதே புகார் தொடர்பாகப் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட இரு வழக்குகள் உயர்நீதிமன்ற விசாரணையில் இருக்கின்ற நேரத்தில் – நீதித்துறையைக்கூட மதிக்காமல் அலட்சியம் செய்து, கைது “வெறியாட்டத்தை” எடப்பாடி திரு. பழனிசாமி நடத்தியிருப்பது வெட்கக் கேடானது.
முதலமைச்சர் எடப்பாடி திரு. பழனிசாமி, துணை முதலமைச்சர் திரு. ஓ.பன்னீர்செல்வம், உள்ளாட்சித் துறை அமைச்சர் திரு. எஸ்.பி.வேலுமணி ஆகியோர் மீது திரு. ஆர்.எஸ்.பாரதி லஞ்ச ஊழல் தடுப்புத் துறைக்கு பல்வேறு ஊழல் புகார்களை அளித்திருக்கிறார். எடப்பாடி திரு. பழனிசாமியின் நெடுஞ்சாலைத்துறையில் நிகழ்ந்துள்ள “கொரோனா கால டெண்டர் ஊழல்” மீது விரிவான புகாரை – ஆதாரங்களுடன் கொடுத்திருக்கிறார்.
“கொரோனா கால ஊழல்”, “கொரோனா தோல்வி” ஆகியவற்றை மூடிமறைக்க – குறிப்பாக முதலமைச்சர் என்ற நிலையில் தனது ஊழலையும், தனது நிர்வாகத் தோல்வியையும் “திசை திருப்ப” வேறு வழி தெரியாமல், குரோத எண்ணத்துடன், ஆர்.எஸ்.பாரதியை அதிகாலையில் கைது செய்துள்ளார் எடப்பாடி திரு. பழனிசாமி.
பட்டியலின – பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காகவும் – அவர்களின் சமத்துவ – சமூகநீதிக்காகவும் காலம் காலமாக அயராது பாடுபட்டு வரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சீர்மிகு பணிகளை, இதுபோன்ற “சிறுபிள்ளைத்தனமான”, அரைவேக்காட்டு, அதிகார துஷ்பிரயோகம் மூலம் – எடப்பாடி திரு.பழனிசாமியோ, அல்லது அவரை தொலைதூரத்தில் இருந்து இயக்கும் “ரிங் மாஸ்டர்களோ” களங்கம் கற்பித்து விடவோ, திசை திருப்பி விடவோ நிச்சயமாக முடியாது என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
“அதிகாரம்” மற்றும் “அராஜகத்தின்” துணையோடு நடத்தப்படும் இதுபோன்ற “நள்ளிரவு கைது” நாடகங்களைப் பார்த்தெல்லாம் திராவிட முன்னேற்றக் கழகம், மிரளாது; நடுங்காது. தமிழக மக்களும் அஞ்சமாட்டார்கள். இந்த மாபெரும் மக்கள் இயக்கம்; பனங்காட்டு நரி. “எடப்பாடி” போன்ற டெல்லி எடுபிடிகளின் சலசலப்புகளுக்கோ, பொய் வழக்குகளின் மிரட்டலுக்கோ என்றைக்கும் அஞ்சாது.
“கொரோனா கால ஊழல்களையும்”, தமிழகத்தின் தலைநகரான சென்னையில் கொரோனாவை தடுக்க முடியாமல் முற்றிலும் தோல்வியடைந்து, “அதோகதியாக” நிற்பதையும் மக்கள் மன்றத்திலிருந்து எடப்பாடி திரு. பழனிசாமியால் ஒருபோதும் மறைத்திடவும் முடியாது – அதற்கான தார்மீகப் பொறுப்புகளிலிருந்து எக்காலத்திலும் தப்பித்து விடவும் முடியாது என்று எச்சரிக்கை விடுக்கிறேன்!
மேலும், கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவில் இருப்பவர்கள் உள்ளிட்ட – திராவிட முன்னேற்றக் கழகத்தினர் மீது முதலமைச்சர் மற்றும் அ.தி.மு.க. அமைச்சர்களின் தூண்டுதலில் மாநிலம் முழுவதும் ஆங்காங்கே பொய் வழக்குகள் புனைவது – சட்டவிரோத – ஜனநாயக விரோத காவல்துறை கைதுகள் போன்ற அராஜக நடவடிக்கைகளைக் கழகம் கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
கொரோனா என்ற கொடிய வைரசின் தாக்கத்தால் நாடே சிக்கி அல்லல்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில், எடப்பாடி பழனிசாமியின் அரசு அதிகாலை கைது போன்ற கீழ்த்தரமான அரசியல் நாடகங்களை அரங்கேற்றி வருவது வெட்கக்கேடானது; கண்டனத்திற்குரியது என்றும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.