உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி தீர்ப்பு! மகிழ்ச்சியில் திமுக தலைவர் ஸ்டாலின்

Photo of author

By Anand

குடும்ப சொத்தில் ஆண்களுக்கு சமமாக பெண்களுக்கும் சம உரிமை இருக்கிறது என்று உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது

தமிழகத்தில் 1989 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்காலத்தில் ஆண்களுக்கு சமமாக பெண்களுக்கு சொத்தில் சம உரிமை வழங்குவதற்கான சட்டம் இயற்றப்பட்டது. இதனைத்தொடர்ந்து மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கடந்த 2005 ஆம் ஆண்டு இந்தியா முழுவதுமாக சொத்தில் பெண்களுக்கு சம உரிமை அளிக்கும் சட்டமானது கொண்டு வரப்பட்டது.

ஆனால் இந்த சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. சொத்தில் சம உரிமை பெண்களுக்கு இல்லை எனவும், இந்த சட்டம் கொண்டு வரப்பட்ட 2005 ஆம் ஆண்டுக்கு முன்பு பிறந்த பெண்களுக்கு இந்த சட்டம் பொருந்தாது என்றும் பல வழக்குகள் இது தொடர்பாக தொடரப்பட்டன.

இந்த நிலையில், இந்த வழக்கின் இறுதி விசாரணையானது இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த விசாரணையின் முடிவில் “ஆண் வாரிசைப் போலவே பெண்களுக்கும் குடும்ப சொத்தில் சம உரிமை உண்டு. மேலும் இது அனைத்து பெண்களுக்கும் பொருந்தும். ஆண்களுக்கு சொத்தை சமமாக பிரித்து வழங்குவது போல பெண்களுக்கும் வழங்க வேண்டும்” என்று அதிரடியாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்த செய்தியை படிக்க: ஆண்களைப் போல பெண்களுக்கும் சம உரிமை! உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

இந்த நிலையில் உச்சநீதிமன்றம் வழங்கிய இந்த தீர்ப்புக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, “பூர்வீக சொத்தில் சம பங்கினை பெண்கள் பெறலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறேன். பெண்களுக்குச் சொத்தில் சமபங்கு உண்டென 1989ம் ஆண்டே சட்டம் கொண்டு வந்த முத்தமிழறிஞர் கலைஞர் திமுகவுக்கு கிடைத்த வெற்றி இது, உரிமை கொண்டவர்களாக பெண்ணினம் உயர அடித்தளம் அமைக்கும் தீர்ப்பு” என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.