மனம் மாறிய திமுக தலைவர் ஸ்டாலின் மகிழ்ச்சியில் பாமக
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாமக திமுகவுடன் கூட்டணி அமைக்காமல் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தது. எப்படியும் பாமக தனித்து போட்டியிடும் அதனால் திமுக சுலபமாக வெற்றி பெற்று விடும் என்று நினைத்திருந்த திமுக தலைவர் ஸ்டாலின் இதனை கண்டு விரக்தியில் பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்களை சூடு, சொரணை இல்லையான்னு கேட்டிருந்தார்.அரசியல் அனுபவம்,வயதில் மூத்தவர் என்று எதையும் பார்க்காமல் வழக்கம் போல ஸ்டாலின் அவர்கள் முதிர்ச்சியில்லாமல் வார்த்தைகளை விட்டது அவருக்கு கடும் எதிராக கடும் விமர்சனத்தை உண்டாக்கியது.
இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்களின் முத்து விழாவை முன்னிட்டு பழையதை எல்லாம் மறந்து விட்டு வார்த்தைக்கு வார்த்தை அய்யா.. அய்யா என்று மருத்துவர் ராமதாசுக்கு ஒரு வாழ்த்து பதிவு போட்டுள்ளார் திமுக தலைவர் ஸ்டாலின்!. இன்றைக்கு பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தனது 80-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையடுத்து அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் வாழ்த்துக் கூறியுள்ளனர்.
இந்நிலையில், திமுக தலைவர் மு.க ஸ்டாலினும் தனது ட்விட்டர் பக்கம் மூலமாக வாழ்த்து கூறியுள்ளார். அதில் ‘பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் மருத்துவர் அய்யா அவர்களுக்கு இதயமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்கிறேன். “முத்து விழா”-வினைக் கொண்டாடும் அய்யா அவர்கள் சிறப்பான உடல்நலனுடனும், நிறைவான மனவளத்துடனும், நீண்ட காலம் வாழ, வணக்கத்துடன் வாழ்த்துகிறேன்! என பதிவிட்டுள்ளார்.
அரசியலில் கூட்டணி என்பது தவிர்க்க முடியாத ஒன்று பலருக்கும் தெரியும். ஆனால் தங்களுடன் கூட்டணி வைக்கவில்லை என்பதற்காகவோ,எதிர்கட்சியினருடன் இணைந்து விட்டார் என்பதற்காகவோ ஒரு மூத்த அரசியல் தலைவரை தரக்குறைவான வார்த்தைகளை கொண்டு விமர்சித்தது அவரது அரசியல் அனுபவமின்மையை தான் காட்டியது. கடந்த காலங்களில் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதி அவர்களுக்கும், மருத்துவர் ராமதாஸ் அவர்களுக்கும் இடையே இருந்த நட்பு போல தற்போது திமுக தலைவராக உள்ள ஸ்டாலினுக்கும், மருத்துவர் ராமதாசுக்கும் நெருக்கமான நட்பு இல்லை என்று தான் கூற முடியும். உதாரணதிற்கு சமீபத்திய கூட்டணி நேரத்தின் போது, “சூடு சொரணை இருக்கா, வெட்கம் இருக்கா என்று திமுக தலைவர் தடித்த வார்த்தைகளை பயன்படுத்தி இருந்தார்.
அரசியல் முதிர்ச்சி எதையுமே பொறுமையாகவும், பக்குவமாகவும் கையாள வைக்கும். குறிப்பாக தமிழிசை சவுந்தராஜன் எவ்வளவு காரசார ட்வீட்கள் போட்டாலும் அதனை முதிர்ச்சியோடு அணுகி பதில் சொல்லும் ஸ்டாலின், மூத்த தலைவர் டாக்டர் ராமதாஸை பார்த்து இப்படி கேட்டது அன்றைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதற்கு காரணம் அந்த கட்சியின் வாக்கு வங்கி அதிமுகவிற்கு ஆதரவாக சென்று விடும் என்ற கோபமே. அவர் நினைத்தது போலவே தான் தேர்தல் முடிவுகளும் வந்தது. இடைத்தேர்தலில் குறிப்பிட்ட வெற்றியை பெற்று அதிமுக அரசு இன்னும் தொடர்கிறது என்றால் அதற்கு பாமகவுடனான கூட்டணி தான் முக்கிய காரணம் என அரசியல் அறிந்தவர்கள் புரிந்து கொள்வார்கள்.
பெரும்பான்மையான வன்னியர் சமூகத்தை சேர்ந்த தொண்டர்களைக் கொண்ட கட்சியின் தலைவரான ஸ்டாலினின் இந்த பேச்சு அவர்களிடையே பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் பாமக தன்னுடன் கூட்டணி வைக்காத ஆற்றாமையின் வெளிப்பாடாகத்தான் இந்த பேச்சு என்று அவர்களுக்கும் தெளிவாக தெரிந்தது.
பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் பற்றி பெரும்பான்மையான மக்களுக்கு நன்றாகவே தெரியும். தற்போதைய அரசியல் தலைவர்களில் மக்கள் நலனை பற்றி சிந்திக்க கூடிய ஒரே தலைவர் அவர் மட்டுமே. உதாரணமாக பொது மக்களின் உடல் நிலையை கருத்தில் கொண்டு முழுமையான மது விலக்கை கொண்டு வர போராடுவது அதற்காக தங்கள் கட்சியின் சார்பாக நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து குறைந்த பட்சம் நெடுஞ்சாலையில் உள்ள 3000 மதுக்கடைகளை நீதி மன்ற உத்தரவின் மூலம் மூட வைத்தார்.
மேலும் வருடம் தோறும் ஆளும் அரசிற்கு உதவியாக நிழல் நிதி நிலை அறிக்கை மற்றும் விவசாயத்திற்கென தனி நிதி நிலை அறிக்கை என தொடர்ந்து சிறந்த அரசியல் தலைவராக செயல்பட்டு வருபவர். கூட்டணி கட்சியாக இருந்தாலும் தன்னுடைய அறிக்கைகள் போராட்டங்கள் மூலம் அவர்களின் தவறுகளை சுட்டி காட்ட தவறியதில்லை. தமிழக அரசியலில் எந்த கட்சியும் கூட்டணி இல்லாமல் தனித்து போட்டியிட்டதில்லை.
அந்த வகையில் கட்சியின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு அடுத்து எந்த கட்சி வெற்றி பெறும் என்பதை கணித்து அதனுடன் கூட்டணி வைப்பது தான் எல்லா கட்சி தலைவர்களும் செய்வது என்றாலும் இங்கு பாமக கூட்டணி வைத்ததை மட்டும் தொடர்ந்து விமர்சனம் செய்வது அக்கட்சிக்கு எதிரான சதியாகவே தெரிகிறது.
இவ்வளவு சிறந்த ஒரு தலைவரை திமுக தலைவர் கூட்டணி வைக்கவில்லை என்ற விரக்தியில் தரக்குறைவாக பேசியது அக்கட்சியினரிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத சூழ்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது அக்கட்சியினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வாழ்த்து அரசியல் நாகரிகமாக தெரிவிக்கபட்டதா? அல்லது அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணிக்கு அச்சாரமா? என்பதை காலம் தான் கூற வேண்டும். எது எப்படியோ கடந்த காலங்களில் திமுக தலைவர் கருணாநிதி மற்றும் மருத்துவர் ராமதாஸ் இடையேயான நட்பை போல தற்போதைய திமுக தலைவர் ஸ்டாலினும் ஏற்படுத்த முயற்சிக்கிறார் என்பது தெளிவாகிறது.
தேர்தல் நேரத்தில் அன்று ஸ்டாலின் ராமதாஸை பார்த்து கேட்ட கேள்வியால், கடும் கோபத்தில் உள்ள பாமக தொண்டர்கள் ஸ்டாலினின் இந்த வாழ்த்து செய்தியால் ஓரளவு திருப்தியடையலாம். மேலும் தொடர்ந்து மருத்துவர் ராமதாஸ் ஸ்டாலினுக்கு எதிரான கருத்துக்களை முன்வைத்து வருபவர் என்றாலும், இன்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறிய வாழ்த்து அக்கட்சியின் தொண்டர்களின் கொதிப்பை மட்டுமல்ல, மருத்துவர் ராமதாஸின் கோபத்தையும் குறைக்கவே செய்யும் என்று எதிர்பார்க்கலாம். அரசியல் ரீதியாக எதிரெதிதாக இருந்தாலும் வாழ்த்தியதன் மூலம் கடந்த காலத்தில் ஸ்டாலினிடம் இல்லாத அரசியல் நாகரீகத்தை தற்போது வெளிப்படுத்தியுள்ளார் என்பதற்காக பாராட்டலாமே.
மேலும் படிக்க : திமுக அரசால் சாத்தியமில்லை என்ற திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசிற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கூறும் ஆலோசனை
மேலும் படிக்க : அனுமதியில்லாமல் தடுப்பணை!ஆந்திராவை தமிழக அரசு எச்சரிக்க வேண்டும் என ராமதாஸ் அறிக்கை
மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.