பொதுமக்களுக்கு இடையூராக பேனர் வைத்த திமுக முக்கிய பிரமுகர்! நடவடிக்கை எடுப்பாரா மு.க.ஸ்டாலின்

Photo of author

By Parthipan K

பொதுமக்களுக்கு இடையூராக பேனர் வைத்த திமுக முக்கிய பிரமுகர்! நடவடிக்கை எடுப்பாரா மு.க.ஸ்டாலின்

சென்னையில் கடந்த மாதம் 12ஆம் தேதி இளம்பெண் சுபஸ்ரீ இருசக்கர வாகனத்தில் சென்றபோது அதிமுக பிரமுகர் இல்ல திருமண விழாவிற்கு வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்து எதிர்பாராதவிதமாக பின்னால் வந்த லாரி ஏறியதால் உடல் நசுங்கி உயிரிழந்தார், இது கடும் விமர்சனத்திற்கு பேனர் விவகாரத்தில் உள்ளாக்கியது,
இந்த சம்பவம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் தமிழக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடந்தபோது கட்சி நிகழ்ச்சிகளுக்கு பிரமுகர்களை வரவேற்று பேனர்களை வைக்க வேண்டாம் என தொண்டர்களுக்கு அறிவுறுத்தி திமுக தரப்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதிமுக தரப்பிலும் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில், திமுகவின் செய்தி தொடர்பாளரும் முக்கிய பிரமுகருமான ராதாபுரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அப்பாவு மகனின் திருமணம் கடந்த ஒன்றாம் தேதி நடந்தது. பணகுடியில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சிக்காக ஷான் தாமஸ் மஹால் திருமண மண்டபம் முன்பு பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டன. இந்த பேனர்களால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டதாக, தானாக முன்வந்து திமுக பிரமுகர் அப்பாவு மீது பணகுடி காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த மாதம் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் கழக நிகழ்ச்சிகளில் பேனர்கள் யாரும் வைக்க வேண்டாம் ‌என்று உறுதிமொழி ஏற்றுக்கொள்வோம் என்று கூறிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தற்போது தனது கட்சியின் முக்கிய பிரமுகர் அப்பாவு மீது என்ன விமர்சனம் வைக்க போகிறார் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.