அரசியல் ஆசையிருந்தால் நேருக்கு நேர் வாங்க! ஆளுநருக்கு சவால் விட்ட அமைச்சர்

குடியரசு தின விழாவில் ஆளுநர் ஆற்றிய உரையை விமர்சித்த அமைச்சர் மதிவேந்தன் அவருக்கு அரசியல் ஆசையிறுந்தால் நேருக்கு நேர் வாங்க என சவால் விடுக்கும் விதமாக அறிக்கை வெளியிட்டுள்ளது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

76 வது குடியரசு தினமான இன்று கொடியேற்றும் விழாவின் போது ஆளுநர் ஆர்.என் ரவி அவர்கள் தனது உரையை வழங்கினார். அவ்வுரையில் “சமுதாயத்தை பிளவுபடுத்த முயற்சி” நடப்பதாக அவர் ஒரு பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார். மேலும் அவர் தமிழகத்தின் கல்வி நிலை, போதைப் பொருட்களின் பயன்பாடு, பட்டியலினத்தவருக்கு எதிரான கொடுமைகள் என பல்வேறு குறைகளை சுட்டிக்காட்டி கவலை தெரிவித்தார்.

மேலும் அவர் நமது நாடானது 2047 ஆம் ஆண்டிற்குள் வளர்ச்சி அடைந்த பாரத நாடக உருவாகும் முயற்சியில் உள்ளது. ஆனால் அதனை அழிப்பதற்கு என சில எதிரிகள் நம் நாட்டின் முன்னேற்ற வேகத்தை குறைக்கும் வகையில் செயல்பட்டு வருகின்றனர் என்று தனது உரையை குடியரசு தின விழாவின் போது ஆளுநர் ஆர் என் ரவி ஆற்றினார்.

ஆளுநரின் உரையை கேட்ட அமைச்சர் மதிவேந்தன் ஆளுநர் எதை வேண்டுமானாலும் பேசட்டும் அது தமிழ்நாடு அரசுக்கும், திமுகவிற்கும் சாதகமாகவே அமையும் என கூறுகிறார். ஆளுநருக்கும் ,திமுகவிற்கும் பல மாதங்களாகவே மோதல்கள் நடைபெற்றுக் கொண்டிருப்பதால் ஆளுநரின் உரையை மதிவேந்தன் அவர்கள் விமர்சித்துள்ளார்.

ஆதிதிராவிடர் நலத்துறையின் அமைச்சரான மதிவேந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசை விமர்சிக்க ஆளுநர் குடியரசு தினத்தை அரசியல் கேடயமாக்குவது மிகவும் கண்டனத்திற்குரியது”என்று கூறியுள்ளார்.

ஆளுநருக்கு எதிரான உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை, ஆளுநரின் தேனீர் விருந்து புறக்கணிப்பு என தனக்கு எதிராக பல கருத்துக்கள் பரவி வருவதால் அதனை மறைக்க திமுக அரசு மீது அவதூறாக பேசியுள்ளார் என அமைச்சர் கூறியுள்ளார். இவ்வாறு தொடர்ந்து தமிழ்நாட்டை மோசமான மாநிலமாக சித்தரித்து தமிழர்களை தேச விரோதிகள் போல பேசி வருவது ஆளுநருக்கு நல்லதல்ல எனவும் கூறியுள்ளார்.

அரசியல் செய்ய ஆசை இருந்தால் அப்பதவியிலிருந்து விலகி- எங்களோடு நேருக்கு நேர் அரசியல் களத்திற்கு வரட்டும். திராவிட மாடல் அரசின் சாதனைகளை நாங்கள் சொல்கிறோம். தமிழ்நாட்டின் பெருமைகளை நாங்கள் பேசுகிறோம். ஆளுநர் ரவி அரசியல்வாதி ரவியாக எங்களுக்கு பதில் சொல்லட்டும்.

அதை விடுத்து குடியரசு தினம், சட்டமன்றம் என எதை எடுத்தாலும் அரசியல் செய்து- நம் நாட்டின் குடியரசுத் தினப் பெருமைகளையும், தமிழ்நாட்டின் அருமைகளையும் கொச்சைப்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன் என மதிவேந்தன் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.