திமுக அமைச்சர் நடத்திய பாகுபலியை மிஞ்சும் பிரமாண்ட திருமண விழா! ஆட்சி மாற்றத்திற்கு காரணமாகுமா?

Photo of author

By Anand

திமுக அமைச்சர் நடத்திய பாகுபலியை மிஞ்சும் பிரமாண்ட திருமண விழா! ஆட்சி மாற்றத்திற்கு காரணமாகுமா?

அரசியல்வாதி வீட்டு நிகழ்ச்சி என்றாலே பிரமாண்டதிற்கு பஞ்சமே இருக்காது. அந்த வகையில் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சர்கள் செல்லூர் ராஜூவும், ஆர்.பி உதயகுமாரும் போட்டி போட்டுக்கொண்டு மதுரை நகரமே குலுங்கக் குலுங்க பிரமாண்ட விழாக்களை நடத்துவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது ஆட்சி மாறிய பின்னர் காட்சி மட்டும் மாறவில்லை என்பதை போல அங்கு சம்பவம் நடந்துள்ளது. தற்போது அந்த பிரமாண்ட நிகழ்ச்சி நடத்துபவர்கள் பட்டியலில் திமுகவின் பத்திரப்பதிவு மற்றும் வணிவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தியும் இணைந்துள்ளார். சமீபத்தில் நடந்த அவரது குடும்ப திருமண விழாவை மதுரை குலுங்க பிரமாண்டமாக நடத்தி ஒட்டுமொத்த திமுகவினரிடம் பாராட்டுக்களை பெற்றுள்ளார்.

திமுக அமைச்சர் பி.மூர்த்தியின் மகன் தியானேஷுக்கும், திருச்சியைச் சேர்ந்த ஸ்மிர்தவர்ஷினிக்கும் திருமணம் நடந்தது. இந்தத் திருமணத்துக்கான ஏற்பாடுகள் பாண்டி கோயில் அருகேயுள்ள மைதானத்தில் கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்று வந்தன என்று கூறப்படுகிறது. இதற்காக பிரமாண்ட கோட்டை வடிவிலான நுழைவு வாயில், சுமார் ஒரு லட்சம் பேர் அமரும் வகையில் பந்தல், ஒரே நேரத்தில் பத்தாயிரம் பேர் அமர்ந்து சாப்பிடும் வகையில் சாப்பாட்டுப் பந்தல், விஐபிகளுக்கு தனி டைனிங் என பாகுபலியையே மிஞ்சும் வகையில் பிரமாண்டத்தை காட்டினார்கள்.

இந்த திருமண விழாவில் மொய் வசூலிக்க மட்டுமே தனியார் நிறுவனம் மூலமாக 50 ஹைடெக் கவுன்டர்கள் அமைக்கப்பட்டிருந்தது. கறி விருந்துக்காக சுமார் 2,000 ஆடுகள், 5,000 கோழிகள் மூலம் பிரியாணி உள்ளிட்ட அசைவ உணவு வகைகள் தயார் செய்யபட்டு பரிமாறப்பட்டன. மேலும் சைவ உணவு விருந்துக்கு தனியாக பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. விழாவில் கலந்து கொள்பவர்கள் பொழுதுபோக்க இசையமைப்பாளர் தேவாவின் இன்னிசைக் கச்சேரி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

திருமண விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் பழம் உள்ளிட்ட பொருள்கள் அடங்கிய தாம்பூலப்பை வழங்கப்பட்டது. ஆனால் கட்சியினர் மத்தியில் கெத்து காட்டினாலும் இந்த பிரமாண்ட திருமண விழா நடத்தியது பொதுமக்கள் மத்தியில் பெரும் வெறுப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த பிரமாண்ட திருமணத்தை போல மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நடத்திய சுதாகரன் மற்றும் இளவரசி திருமணத்தையும் நினைவு கூற வேண்டும். ஏனென்றால் தனது வளர்ப்பு மகன் சுதாகரனின் திருமணத்தை அந்த காலத்திலேயே அவர் கோடிக்கணக்கில் செலவு செய்து நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலாவுடன் பிறந்த அக்கா வனிதாமணியின் கடைசி மகன்தான் சுதாகரன். தினகரன் மற்றும் பாஸ்கரனுக்கு அடுத்ததாகப் பிறந்தவர் தான் இந்த சுதாகரன். அவரை தான் ஜெயலலிதா தன்னுடைய வளர்ப்பு மகனாக தத்து எடுப்பதாக அறிவித்தார்.அப்போதே இவ்வளவு பெரிய ஆணை தத்தெடுப்பதா என தமிழகமே வியந்து மூக்கு மீது விரலை வைத்தது.

ஆனால் மக்களின் இந்த வியப்பு அடங்குவதற்குள் அடுத்த சில வாரங்களிலேயே நடிகர் சிவாஜி கணேசன் பேத்தியோடு சுதாகரனுக்கு திருமணம் நடைபெறும் என்று அறிவித்து அடுத்த வியப்பை ஏற்படுத்தினார். அப்போது முதலே இது குறித்த சர்ச்சை தொடங்கியது.

இவ்வாறு பிரமாண்டமாக நடத்தப்பட்ட ஜெயலலிதா வளர்ப்பு மகன் சுதாகரன் திருமண விழாவில் சினிமா கலை இயக்குநர் தோட்டா தரணி 70,000 சதுர அடிப் பரப்பில் பந்தல் அமைத்தார். அப்போதே 25 ஆயிரம் பேர் அமரும் வகையிலான உணவருந்தும் அரங்கு என பாகுபலியை மிஞ்சிய பிரமாண்டத்தை ஜெயலலிதா காட்டினார். இந்தத் திருமணத்தில் விலையுயர்ந்த ஆபரணங்களை அணிந்து கொண்டு ஜெயலலிதாவும், சசிகலாவும் நடந்து வந்த புகைப்படங்கள் வெளியாகி தான் பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது.இதுவே ஆட்சி மாற்றம் ஏற்படவும் காரணமாக அமைந்தது என்றும் கூறலாம்.

மாதம் 1 ரூபாய் மட்டுமே ஊதியம் வாங்குகிறேன் என்று கூறிய ஜெயலலிதாவா இப்படி பிரமாண்டமாக நடத்துகிறார் ? என்ற கேள்வி மக்கள் மத்தியில் பரவலாக எழுந்தது. இதனைத்தொடர்ந்து பொதுமக்கள் மத்தியில் இது பேசுபொருளாகி பெரிய அளவில் சர்ச்சையானது.எதிர்க்கட்சிகளும் இதை சரியாக பயன்படுத்திக் கொண்டனர்.அந்த வகையில் அதிமுக ஆட்சி மாற்றத்திற்கு இதுதான் பெரிய காரணம் என்றும் அப்போது சொல்லப்பட்டது.

இந்நிலையில் திமுக அமைச்சர் மூர்த்தியின் இந்த பிரமாண்ட திருமண விழா மக்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.அடுத்து திமுகவின் ஆட்சி மாற்றத்துக்கு காரணமாக இருக்கும் என்றும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.