விரைவில் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் அனைத்து கட்சி வேட்பாளர்களும் வேட்புமனுவை தாக்கல் செய்துவிட்டு மிக தீவிரமான பிரச்சாரத்தில் இறங்கிவிட்டார்கள்.
அந்த வகையில் அதிமுக திமுக என்ற இரு கட்சிகளின் முக்கிய வேட்பாளர்களும் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்க தொடங்கிவிட்டார்கள் அதோடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
ஒரு நாளைக்கு 10 தொகுதி என்கின்ற அளவிற்கு கணக்கு போட்டு அவர் பிரச்சாரம் செய்து வருகிறார். இந்த நிலையில், நேற்றைய தினம் பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டத்திற்கு வருகை தந்த முதலமைச்சர் அந்த பகுதிகளில் பிரச்சாரத்தை மேற்கொண்டார். அதோடு கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி, விருதாச்சலம், நெய்வேலி. பல இடங்களில் பிரச்சாரம் செய்துவிட்டு அதன் பிறகு ஜெயங்கொண்டம், அரியலூர், பெரம்பலூர், குன்னம் ஆகிய இடங்களில் தன்னுடைய பிரச்சாரத்தை மேற்கொண்டார்.
இந்தப் பிரச்சாரத்தில் அவர் தெரிவித்ததாவது, தமிழக மக்கள் அனைவரும் எங்கள் மீது நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள்.அதிமுக தான் மறுபடியும் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். ஆனால் இதெல்லாம் பொறுக்க முடியாத ஸ்டாலின் எங்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்து இருக்கிறார். ஒரு விவசாயி முதல்வராக இருப்பது ஸ்டாலினுக்கு பிடிக்கவில்லை ஆகவே என் மீது வீண் பழி சுமத்துகிறார் என்று தெரிவித்திருக்கிறார்.
அதேபோல தமிழகம் முழுவதிலுமே திமுகவினரால் அதிமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. நேற்று பிரச்சாரம் ஒன்றில் உரையாற்றிய திமுக தலைவர் ஸ்டாலின் காவல்துறையினரை கைக்குள் போட்டுக்கொண்டு வாக்களிப்பதற்கு பணம் கொடுத்திருக்கிறார்கள் அதிமுகவினர் என்பதுபோல விமர்சனம் செய்திருந்தார்.
ஆனால் விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் தொகுதியில் திமுகவின் சார்பாக முன்னாள் அமைச்சரும் தற்போதைய திருக்கோவிலூர் தொகுதியில் சட்டசபை உறுப்பினருமான பொன்முடி போட்டியிடுகின்றார். நேற்று சந்தைப்பேட்டை என்ற இடத்தில் பிரச்சாரம் செய்த அவர் அந்தப் பகுதியில் இருக்கக்கூடிய திருநங்கைகளின் வீடுகளுக்குச் சென்று அவர்களிடம் வாக்கு சேகரித்தார்.
இதனைத் தொடர்ந்து அந்த வீடுகளுக்கு அருகே இருந்த ஒரு டீக்கடைக்கு திடீரென்று சென்ற பொன்முடி தன்னுடைய ஆதரவாளர்கள் 5 பேருடன் அங்கு தேனீர் அருந்திவிட்டு பின்பு 500 ரூபாய் நோட்டுகளை எடுத்து அந்த கடையின் உரிமையாளரிடம் கொடுத்திருக்கிறார். இதனை கண்ட டீக்கடைக்காரர் சற்று அதிர்ச்சி அடைந்திருக்கிறார். ஐந்து டீக்கு 2000 ரூபாயா என்று அந்த டீக்கடையில் உரிமையாளர் அதிர்ச்சியடைந்து போனார். அதன் பிறகுதான் தெரியவந்தது அது டீ குடித்ததற்காகக் கொடுக்கப்பட்ட பணம் அல்ல வாக்களிப்பதற்காக கொடுக்கப்பட்ட பணம் என்று.
வீதி வீதியாக வீடு வீடாக சென்று அதிமுக ஓட்டு வழங்குவதற்காக லஞ்சம் கொடுக்கிறது என்று பிரச்சாரம் செய்து வருகிறார் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின். இந்தநிலையில் அவர் கட்சியின் வேட்ப்பாளரே வாக்களிப்பதற்காக பட்டப்பகலில் பணம் கொடுத்து இருப்பது தமிழகம் முழுவதிலும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாக சொல்கிறார்கள்.
மேலும் இது தான் திமுகவின் லட்சணமா என்பது போலவும் பேசத் தொடங்கி இருக்கிறார்கள். அதோடு வாக்களிப்பதற்காக 2000 ரூபாய் கொடுக்கிறார்கள் என்றால் வாக்களித்த பின்னர் அவர் ஆட்சிக்கு வந்தால் அந்த கட்சியை சார்ந்தவர்கள் எந்த அளவிற்கு பணம் சம்பாதிப்பதில் கவனம் செலுத்துவார்கள் என்பதுபோன்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.
இந்த நிலையில், ஒருவேளை அவருக்கு வாக்களித்து அவர் வெற்றி பெற்றுவிட்டாலும் கூட அவரிடம் எந்தவித உதவியும் கேட்க முடியாது. அப்படி கேட்டாலும் நீ பணம் வாங்கிக் கொண்டு தானே வாக்களித்தாய் என்பது போன்ற கேள்விகளை நம்மிடமே கேட்பார்கள் என்ற கருத்தும் உலாவி வருகிறது.
மேடைக்கு மேடை அதிமுக ஊழல் செய்திருக்கிறது அதனை வெளிக்கொண்டு வருவதற்காக தான் நான் பேசிக் கொண்டிருக்கிறேன். ஆகவே அதிமுகவின் ஊழல் ஆட்சியை அகற்ற எங்களுக்கு வாக்களியுங்கள் என்பது போன்று பேசி வரும் ஸ்டாலின், முதலில் அவர் கட்சியில் இருப்பவர்கள் செய்யும் ஊழலை கண்டறிந்து அவர்கள் மீது முதலில் நடவடிக்கை எடுக்கட்டும் என்றும் தெரிவிக்க தொடங்கியிருக்கிறார்கள் சாமானிய மக்கள்.