கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட திமுக எம்பி ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனு!

Photo of author

By Sakthi

கடலூர் மாவட்டம் பனிக்கன்குப்பத்தில் கடலூர் திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் அவர்களுக்கு சொந்தமான முந்திரி ஆலையில் வேலை பார்த்த தொழிலாளி கோவிந்தராஜ் கடந்த செப்டம்பர் மாதம் இருபதாம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார்.

இதனைத் தொடர்ந்து சிபிசிஐடி காவல்துறையினர் இதுதொடர்பாக விசாரணை செய்ததில் அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது, திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் மற்றும் அவரது உதவியாளர் நடராஜன், கந்தவேல், அல்லாபிச்சை, சுந்தர் என்கின்ற சுந்தர்ராஜ், வினோத், உள்ளிட்டோர் மீது கொலை வழக்கு பதிவு செய்து இருக்கிறார்கள்.

திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் அவர்களை தவிர்த்து மற்ற 5 நபர்களையும் காவல்துறையினர் கைது செய்தார்கள், இந்த சூழ்நிலையில், சென்ற பதினோராம் தேதி பண்ருட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை அன்றைய தினமே சிபிசிஐடி காவல்துறையினர் தங்களுடைய கட்டுப்பாட்டில் எடுத்து விசாரணை செய்தார்கள், மறுபடியும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ரமேஷ் 27ஆம் தேதி வரையில் 15 நாட்கள் காவலில் வைக்கப்பட்டார் இதற்கான உத்தரவை நீதிபதி பிரபாகரன் வெளியிட்டு இருந்தார்.

கடலூர் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கின்ற திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் ஜாமீன் கேட்டு வழக்கறிஞர்கள் சிவராஜ், பக்கிரி வெளியிட்டோர் மூலமாக கடலூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார், இந்த மனு மீதான விசாரணை நாளைய தினம் நடைபெற இருக்கிறது.