பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் திடீரென்று நிதின் கட்கரியைச் சந்தித்த திமுக எம்.பி.க்கள்
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற திமுக எம்பிக்கள் கூட்டாக இணைந்து மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரியைச் சந்தித்து சென்னை – சேலம் இடையேயான 8 வழிச்சாலை திட்டத்தை கைவிட வேண்டும் என்று மனு அளித்துள்ளனர்.
சென்னை – சேலம் இடையே 8 வழிச் சாலை அமைக்க மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது மாநில அரசு அதற்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் உதவி செய்து வருகிறது. இந்தத் திட்டத்துக்காக விவசாய நிலங்களை கையகப்படுத்தும் பணியில் தமிழக அரசு ஈடுபட்டது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் சார்பாக பாமகவின் அன்புமணி ராமதாசு, தன் கட்சிக்காரர் ஒருவரின் நிலம் பாதிக்கபடுவதாக நாம் தமிழர் கட்சியை சேர்ந்த வழக்கறிஞர் மற்றும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பாக வழக்கு தொடரப்பட்டது.
இவ்வாறு தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், விவசாய நிலங்களை கையகப்படுத்த தடை விதித்தது. நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் வந்த தீர்ப்பால், மத்திய, மாநில அரசுகள் அமைதியான, இது மக்களுக்கும் விவசாயிகளுக்கும் ஓரளவு நிம்மதியை அளித்தாலும்,இது ஒரு இடைக்கால நிம்மதி தான் மத்திய அரசு இதை மீண்டும் ஆரம்பிக்கும் என்ற அச்சமும் மக்கள் மத்தியில் தொடர்ந்து நிலவி வந்தது.
தேர்தலுக்கு முன்பு தமிழகத்தின் பிரதான எதிர்கட்சியான திமுகவே இந்த விவகாரத்தில் அமைதியாக இருந்த நேரத்தில் வழக்கம் போல பாமக இந்த திட்டத்தில் தீவிர எதிர்ப்பை காட்டி வந்தது. குறிப்பாக அப்போது தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த அன்புமணி ராமதாஸ் எட்டு வழி சாலையால் பாதிக்கப்படும் தனது தொகுதி மக்கள் மட்டுமல்லாமல் மற்ற மாவட்ட மக்களையும் சந்தித்து அவர்களது கருத்துக்களை கேட்டறிந்து வந்தார்.
இவ்வாறு சென்னை சேலம் இடையேயான எட்டு வழிச் சாலையை தீவிரமாக எதிர்த்து வந்த பாமக மக்களவை தேர்தலில் இந்த திட்டத்தை செயல்படுத்த துடிக்கும் பாஜக மற்றும் அதிமுகவுடன் கூட்டணி வைத்தது கடும் விமர்சனதிற்குள்ளானது. இதை தொடர்ந்து கூட்டணியில் இருந்தாலும் இந்த திட்டத்தை எதிர்த்து தீவிரமாக அழுத்தம் கொடுப்போம் என்றும், எட்டு வழிச் சாலையை எதிர்த்து தொடர்ந்து பாமக போராடும் என்றும் அன்புமணி ராமதாஸ் விளக்கமளித்தார். அதைப்போலவே நீதிமன்றமும் அன்புமணி ராமதாஸ் தொடங்கிய வழக்கில் அவருக்கு ஆதரவாக எட்டு வழிச் சாலை பணிக்கு தடை விதித்து உத்தரவிட்டது.
மக்களவை தேர்தலுக்கு பிறகு சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. உச்ச நீதிமன்ற மேல் முறையீட்டு வழக்கு விசாரணை நடந்தபோது, சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்நிலையில், சென்னை – சேலம் 8 வழிச்சாலை திட்டத்தை கைவிட வேண்டும் என டெல்லியில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை நேரில் சந்தித்து புதியதாக வெற்றி பெற்ற திமுக எம்.பி.க்கள் வலியுறுத்தியுள்ளனர்.

சென்னை சேலம் எட்டு வழிச் சாலை திட்டம் நிறைவேற உள்ள தொகுதிகளைச் சேர்ந்த திமுக எம்.பி.க்கள் அனைவரும் கூட்டாக இணைந்து அமைச்சரை சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பில் எஸ்.ஆர்.பார்த்திபன் (சேலம்), கவுதம சிகாமணி (கள்ளக்குறிச்சி), செந்தில்குமார் (தருமபுரி), அண்ணாதுரை (திருவண்ணாமலை) ஆகிய எம்.பி.க்கள் கூட்டாக இணைந்து திடீரென்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரியைச் சந்தித்து வலியுறுத்தியுள்ளனர். மேலும் இதுதொடர்பாக அமைச்சரிடம் கோரிக்கை மனுவையும் அளித்துள்ளனர்.
பொது மக்களையும், பாதிக்கப்படும் விவசாயிகளையும் சந்தித்து சமாதானப்படுத்தி இத்திட்டத்தை நிறைவேற்றுவோம் என்று அதிமுக அரசு கூறிவரும் நிலையில், திமுக எம்.பி.க்கள் இத்திட்டத்தை கைவிடக் கோரி மத்திய அமைச்சரை வலியுறுத்தியிருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Dmk MPs met Road Transport & Highways Minister Nitin Gadkari