போராட்டதிற்கு திரளாக வாருங்கள்! திமுக தொண்டர்களுக்கு கடிதம் மூலம் அழைப்பு விடுத்தார் மு.க.ஸ்டாலின்.

Photo of author

By Parthipan K

போராட்டதிற்கு திரளாக வாருங்கள்! திமுக தொண்டர்களுக்கு கடிதம் மூலம் அழைப்பு விடுத்தார் மு.க.ஸ்டாலின்.

முப்பெரும் விழாவினை வெற்றிகரமாகவும் புதுமையாகவும் நடத்தி முடித்திட உணர்வுப்பூர்வமாக ஒத்துழைப்பு நல்கிய உங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து கடிதம் எழுதுவதற்கு முன்பே, களத்திற்கு அழைக்கின்ற கடிதத்தினை எழுதுகின்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

தந்தை பெரியார் பிறந்தநாளில் பிறந்த திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு இன்று 70ஆம் அகவை. அகம் மகிழ்ந்து கொண்டாட வாருங்கள் என உங்களில் ஒருவனான நான் அழைக்கவில்லை. அறப்போர்க்களம் காண வாருங்கள் என்றுதான் அழைக்கிறேன். அன்னைத் தமிழைக் காப்பதுதான் நமக்குப் பெருமகிழ்ச்சி. அதற்கான போராட்டமே நமக்குத் திருவிழா. அத்தகைய திருவிழாவை நாம் கொண்டாடவில்லை. மத்திய உள்துறை அமைச்சர் மாண்புமிகு அமித்ஷா அவர்கள், ‘இந்தி திவாஸ்’ என்கிற இந்தி நாளினையொட்டி தெரிவித்த கருத்துதான் நம்மைக் கிளர்ச்சி கொள்ள வைத்திருக்கிறது.

இது நமக்கான போராட்டமல்ல. நம் உயிரினும் மேலான தமிழ் மொழி காக்கும் போராட்டம். தந்தை பெரியாரும் பேரறிஞர் அண்ணாவும் முத்தமிழறிஞர் கலைஞரும் கட்டிக்காத்த உணர்வினை வெளிப்படுத்தும் போராட்டம்.

அன்னைத் தமிழைக் காத்திடுவோம்.

வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்!

என்று திமுக தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.