நெருங்கி வரும் நாடாளுமன்ற பொது தேர்தல்! தயாராகும் திமுக வாக்குச்சாவடி முகவர்களுடன் முதல்வர் நேரடி ஆலோசனை!

0
211

நாடாளுமன்ற தேர்தல் 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ளது. இதற்காக மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக ஏற்கனவே தீவிரமாக செயல்பட்டு வருகின்றது. ஒவ்வொரு மாநில தலைவர்களையும் தேர்தல் பணிகளை தொடங்குமாறு அறிவுறுத்தி உள்ளது. இதனைத் தொடர்ந்து பாஜக ஆட்சியின் சாதனைகள் பொதுமக்களை சென்றடையும் விதத்தில் பொது கூட்டங்களை நடத்தி வருகிறது. 3வது முறையாக ஆட்சியைப் பிடிக்க பாஜக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதேபோல பாஜகவை எதிர்க்க எதிர்க்கட்சிகள் அனைவரும் ஒன்றிணை வேண்டும் என்று காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வருகிறது. இதற்காக பல்வேறு ஆலோசனைக் கூட்டங்களை எதிர்க்கட்சிகள் நடத்தி வருகின்றன.

என்னதான் எதிர்க்கட்சிகள் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்று செயல்பட்டாலும் கூட மோடியை எதிர்த்து களம் காண்பதற்கான சரியான தலைவர் எதிர்க்கட்சிகளில் இல்லை என்றே சொல்லப்படுகிறது ஆனாலும் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் உள்ளிட்ட இருவரும் மோடிக்கு சமமான தலைவர்களாக பார்க்கப்படுகிறார்கள்.

ஒருவேளை காங்கிரஸ் கட்சி சம்மதம் தெரிவித்தால் இந்த இருவரில் யாராவது ஒருவரை எதிர்க்கட்சிகளின் பொது பிரதமர் வேட்பாளராக அறிவித்து எதிர்க்கட்சிகள் களம் காணலாம் என்று சொல்லப்படுகிறது. அதேபோல காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரையில் அடுத்த பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தி தான் என்று சொல்லப்பட்டாலும் கூட அவருக்கு பிரதமரம் நரேந்திர மோடியுடன் போட்டியிடும் அளவிற்கு அரசியல் அனுபவம் இல்லை என்றே அரசியல் அறிஞர்கள் கருதுகிறார்கள்.

இந்த நிலையில், திமுகவின் பொதுக்குழு கூட்டம் கடந்த மாதம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய திமுகவின் தலைவர் ஸ்டாலின் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்டோர் தயாராக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்த நிலையில், அடுத்த கட்டமாக தேர்தல் ஏற்பாடுகள் குறித்து வாக்குச்சாவடி முகவர்களுடன் ஆலோசனை நடத்த விருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து திமுகவின் தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், வாக்குச்சாவடி முகவர்கள் எல்லோருடனும் கழகத் தலைவர் அவர்கள் கலந்துரையாடும் கூட்டம் நவம்பர் மாதம் 12ஆம் தேதி மாலை 6 மணி அளவில் காணொளி மூலமாக நடைபெறும் காணொளி கூட்டத்தை 234 தொகுதிகளிலும் தொகுதி வாரியாக உள்ளரங்கு கூட்டமாக ஏற்பாடு செய்ய வேண்டும் என்று மாவட்ட செயலாளர்களும், பொறுப்பு அமைச்சர்களும் அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தொகுதிக்குரிய அனைத்து வாக்குச்சாவடி முகவர்களும் இந்த கூட்டத்தில் கட்டாயமாக பங்கேற்க வேண்டும். தலைவர் அவர்கள் சில தொகுதிகளில் இருக்கின்ற முகவர்களின் பெயர்களை குறிப்பிட்டு அழைத்து அவர்களுடன் நேரடியாக உரையாடுவார். மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் அவரவர்க்குரிய தொகுதியில் முகவர்களுடன் ஒன்றிணைந்து பங்கேற்க வேண்டும். நகர, ஒன்றிய, பேரூர் கழகச் செயலாளர்களும், அவரவர் தொகுதியில் கலந்து கொள்ள வேண்டும். அனைத்து தொகுதிகளிலும் காணொளி சாதனங்கள் தொழில்நுட்ப ரீதியில் சோதனை செய்யப்பட்டு மின்தடை ஏற்படும் என்றால் அதற்குரிய மாற்று ஏற்பாடுகளையும் செய்து வைத்துக் கொள்ள வேண்டுமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வாக்குச்சாவடி முகவர்களின் பட்டியல் தலைவர் அவர்களின் நேரடி பார்வைக்கு செல்வதால், முகவர்கள் பட்டியலை இறுதி செய்து, வாக்காளர் பட்டியல் வரிசை எண், தொடர் எண் சரிபார்க்கப்பட்டு உடனடியாக தலைமைக் கழகத்திற்கு மின்னஞ்சலில் அனுப்பி வைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று அந்த தலைமை கழக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleஇந்திய தனித்துவ அடையாள ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு! ஆதார் வைத்துள்ள அனைவரும் இதனை செய்ய வேண்டும்!
Next articleஎன் மேல் எச்சில் துப்பி அவமானப் படுத்தினார்… பிரபல நடிகை மீது பரபரப்பு புகாரைக் கூறிய நபர்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here