திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கைது
சென்னையில் குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை கைது செய்ய சென்ற காவல் துறையினருடன் திமுகவினர் வாக்குவாதம் செய்தது அப்பகுதியில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாஜக தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுக்க ஆதரவு மற்றும் எதிர்ப்பு குரல்கள் எழுந்து வருகின்றன.
இதனையடுத்து பல்வேறு மாநிலங்களில் ஆட்சியில் உள்ள எதிர்கட்சித் தலைவர்கள் இதனை எதிர்த்து தீவிரமாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் தமிழகத்தில் திமுகவினரும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதில் கலந்து கொண்ட திமுகவின் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மத்திய அரசிற்கு எதிரான கோஷங்களை எழுப்பி போராட்டம் செய்தார். 2000 க்கும் மேற்பட்ட திமுகவினர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர் என்று கூறப்படுகிறது.
திமுக சார்பில் இன்று நடந்த இந்த போராட்டத்தில் இந்தியாவை பிரிக்காதே, மக்களை பிரிக்காதே என்ற கோஷங்கள் எழுப்பப்பட்டது . அதே போல் இந்த சட்டத்திற்கு காரணமான மோடி ஒழிக, அமித் ஷா ஒழிக என்றும் உதயநிதி ஸ்டாலின் கோஷம் எழுப்பி போராட்டம் செய்திருக்கிறார். உதயநிதி ஸ்டாலின் கோஷமிட்டதை தொடர்ந்து திமுகவினர் பலரும் மத்திய மாநில அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினார்கள்.

இதனையடுத்து உதயநிதி ஸ்டாலின் குடியுரிமை சட்ட நகலை கிழித்து போட்டார். நிறைய நகல்களை கிழித்து கட்சி தொண்டர்களை நோக்கி வீசினார். இதனையடுத்து திமுக தொண்டர்களும் தங்களிடம் இருந்த சட்ட நகலை கிழித்து எறிந்தனர். இன்னும் சிலர் சட்ட நகலுக்கு தீ வைத்தும் போராட்டம் செய்தனர்.
இவ்வாறு ஒரு சட்ட நகலை கிழிப்பது சட்டப்படி குற்றமாகும். இதனையடுத்து இதற்கு காரணமான உதயநிதி ஸ்டாலினை கைது செய்ய போலீசார் முயன்றனர். ஆனால் திமுக தொண்டர்கள் உதயநிதி ஸ்டாலினை கைது செய்ய காவல் துறையினரை அனுமதிக்கவில்லை. மேலும் அங்கிருந்த திமுக தொண்டர்கள் உதயநிதி ஸ்டாலினை கைது செய்ய விடமால் தடுத்து காவல் துறையினருடன் வாக்கு வாதம் செய்தனர்.
இதையடுத்து காவல் துறையினர் வேகமாக திமுக தொண்டர்களை கைது செய்தனர். இதனால் உதயநிதி தானாக கீழே இறங்கி வந்து காவல் துறையினருடன் சென்றார். காவல் துறையினர் அவரை கைது செய்து அரசு பேருந்தில் அழைத்து சென்றனர்.