மருத்துவர் ராமதாஸ் ஆரம்பித்ததை கையிலெடுத்த பொன்னார்! எச்சரிக்கும் திமுக
திமுகவின் அதிகாரபூர்வ நாளிதளான முரசொலியின் அலுவலகம் அமைந்துள்ளது பஞ்சமி நிலம் என பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்ட அதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் அந்த நிலத்திற்கான பட்டாவை பதிவிட்டு பதில் சொல்ல விவாதம் முற்றியது. இதற்கு பதிலளித்த மருத்துவர் ராமதாஸ் பட்டாவை ஸ்டாலின் அந்த நிலத்திற்கான மூலப் பத்திரத்தை காட்டுவாரா? என கேள்வியெழுப்பினார். இதனையடுத்து இதற்கு பதிலளித்த ஸ்டாலின் ஆதாரத்தை வெளியிட்டால் இரண்டு மருத்துவர்களும் அரசியலிலிருந்து விலகுவார்களா? என்றும் கூறியிருந்தார்.
பஞ்சமி நில விவகாரம் ஆரம்பித்ததும் பட்டாவை வெளியிட்ட ஸ்டாலின் மூலப் பத்திரத்தை வெளியிட மட்டும் நிபந்தனை விதித்தது அந்த நிலத்தின் மீதான சந்தேகத்தை அதிகரித்தது. இவ்வாறு திமுக மற்றும் பாமக இடையே காரசாரமான விவாதங்கள் தொடர்ந்து நடந்து வந்தன. இந்நிலையில் இது தொடர்பாக ஆணையத்தில் உரிய ஆதாரங்களை சமர்ப்பிப்போம் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்து, அது தான் தன்னுடைய இறுதி பதில் என்றும் கூறி பின்வாங்கினார்.
இந்நிலையில் இந்த விவகாரத்தை மீண்டும் கையிலெடுத்த பாஜக முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க வேண்டுமெனவும், அவ்வாறு பஞ்சமி நிலத்தில் அமைந்திருந்தால் முரசொலி அலுவலகத்திற்கு சீல் வைக்க வேண்டுமெனவும் அக்கட்சியின் சார்பாக பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து நேற்று மீண்டும் பொன்.ராதாகிருஷ்ணன், “முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்திருந்தால் அதனை உடனே அரசிடம் ஒப்படைக்க வேண்டும். அந்த நிலம் ரூ.5 கோடி மதிப்பு எனவும், அந்த நிலத்தை தமிழக அரசிடம் திருப்பி கொடுக்கும் பட்சத்தில் திமுகவிற்கு ரூ.5 கோடி இழப்பு என்றால் அந்த பணத்தை நான் அல்லது பாஜக தரத் தயார்” என்று தெரிவித்து மீண்டும் சர்ச்சையை கிளப்பிவிட்டார்
பாஜகவின் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்திருந்த கருத்துக்கு பதில் அளிக்கும் வகையில் திமுகவின் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது, நாடாளுமன்றத்திற்கே போகக்கூடாது என்று கன்னியாகுமரி மக்களால் நிராகரித்து தூக்கியெறியப்பட்ட பொன். ராதாகிருஷ்ணன் கற்பனையான பஞ்சமி நிலக் குற்றச்சாட்டை வைப்பது வெட்கக்கேடானது. ஓய்வு அரசியலில் ஒய்யாரமாக இருக்கும் பொன். ராதாகிருஷ்ணன் துணிச்சல் இருந்தால் ஆதாரங்களை வெளியிட வேண்டும். அதற்கு வக்கில்லை என்றால் வேறு வழிகளில் தனது கட்சிக்குள் விரும்பும் தலைவர் பதவியை பெற முயற்சிக்க வேண்டும் என்று விமர்சித்தார்.
பொன். ராதாகிருஷ்ணனுக்கு தைரியம் இருந்தால் மத்திய அரசின் தவறான கொள்கைகளால் இன்றைக்கு தாறுமாறாக நிலைகுலைந்து நிற்கும் பொருளாதாரத்தைப் பற்றியும், வேலையிழப்பு குறித்தும் பேசட்டும் என்றும் தெரிவித்த ஆர்.எஸ்.பாரதி, கற்பனைக்கு எட்டாத குற்றச்சாட்டை, கதைக்கு உதவாத புகாரை பத்திரிகைகள் தலைப்புச் செய்தி போடுகிறது என்பதற்காக பொன்.ராதாகிருஷ்ணன் பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஊழல் அதிமுகவுடன் இருக்கும் பழக்க தோஷத்தால் பொய்களை உண்மைகளாக்க புலம்புவதை நிறுத்திக் கொள்ளுங்கள். முடிந்தால் பஞ்சமி நிலம் குறித்த ஆதாரத்தை வெளியிடுங்கள். அதற்கு நாம் லாயக்குப்பட மாட்டோம் என்று நீங்கள் கருதினால், கிடைத்த ஓய்வைப் பயன்படுத்தி அரசியலிலும் ஓய்வு எடுங்கள். அதை விடுத்து வீணாக திமுக பற்றி பிதற்றினால் அரசியல் இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு வந்து விடலாம் என்று கணக்குப் போட்டு – திமுகவை வீண் வம்புக்கு இழுக்காதீர்கள் என்று பொன்.ராதாகிருஷ்ணனுக்கு அவர் எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.
இவ்வாறு பாமக நிறுவனர் மருத்துவர் ஆரம்பித்து வைத்த விவகாரத்தை பாஜகவினர் கையிலெடுக்க திமுக சிக்கி கொண்டு தவிக்கிறது.