நகர்புற உள்ளாட்சித் தேர்தல்! இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோருடன் முக்கிய ஆலோசனையில் இறங்கும் முதலமைச்சர் ஸ்டாலின்!

Photo of author

By Sakthi

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு நேற்று மாலை வெளியிடப்பட்டது அதனடிப்படையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. வாக்கு எண்ணிக்கை 22ஆம் தேதி நடைபெற உள்ளது, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் இறங்கியிருக்கின்றன.

ஆளும் கட்சியான திமுக இதற்கு முந்தைய உள்ளாட்சித் தேர்தல்களில் பெற்ற வெற்றியை விட மகத்தான வெற்றியை பெறுவதற்கு வியூகத்தை அமைத்து வருகிறது.

இதன் ஒரு கட்டமாக அந்தக் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கூட்டம் இன்றைய தினம் நடைபெற இருக்கிறது இது தொடர்பாக அந்த கட்சியின் பொதுச் செயலாளரும், மாநில நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான, ஸ்டாலின் தலைமையில் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் நாடாளுமன்றம், சட்டமன்றம் உள்ளிட்ட உறுப்பினர்களின் கூட்டம் 27 ஆம் தேதி மாலை 6 மணி அளவில் காணொலிக் காட்சியின் மூலமாக நடைபெறும். இந்த கூட்டத்தில் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் சட்டசபை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எல்லோரும் தவறாமல் பங்கேற்று கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்து இருக்கிறார்.