வார்த்தை தவறுதலாக வந்துவிட்டது! நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு வருத்தம் தெரிவித்த அண்ணாமலை!

0
57

தியாகராயநகரில் இருக்கின்ற கமலாலயத்தில் தமிழக பாஜகவின் தலைவர் அண்ணாமலை தேசியக்கொடியை ஏற்றி வைத்து இனிப்புகளை வழங்கி சிறப்புரை ஆற்றியிருக்கிறார். இதனையடுத்து கட்சி அலுவலகத்தில் இருக்கின்ற பாரதமாதா சிலை மற்றும் தமிழன்னை சிலைகளுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தி இருக்கிறார் அண்ணாமலை.

இந்த நிகழ்ச்சியில் தமிழக பாஜகவின் அமைப்பு பொதுச் செயலாளர் கேசவன் விநாயகம், துணைத் தலைவர் வி பி துரைசாமி, பொதுச் செயலாளர் நாகராஜன் வர்த்தக அணி துணை தலைவர் ராஜா, மீனவர் அணி செயலாளர் செம்மலர் சேகர் ,நடிகர் செந்தில் உட்பட பலரும் பங்கேற்றார்கள்.

அப்போது உரையாற்றிய அவர் மாணவி லாவண்யா மரணத்தில் ஒரு சாதாரண மனிதர் லாவண்யாவின் கடைசியாக பதிவு செய்த வாக்குமூலத்தை காவல்துறையிடம் ஒப்படைத்து இருக்கின்றோம். அது லாவண்யாவின் குரல்தான் என்று காவல்துறையும் ஒப்புதல் வழங்கி இருக்கிறது .

அதை தான் மதுரை உயர்நீதிமன்ற கிளையும் தெரிவித்து உள்ளது என கூறியிருக்கிறார்.லாவண்யாவின் மரணம் தொடர்பான உண்மை வெளிவர வேண்டும் என்றால் சிபிஐ விசாரணை வேண்டும் என்று கூறி இருக்கிறார் அண்ணாமலை.

வள்ளுவர் கோட்டம் அருகே நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தின்போது சட்டசபை உறுப்பினர் நயினார் நாகேந்திரன் உரையாற்றியபோது வார்த்தை தவறுதலாக வந்துவிட்டது. அதற்காக வருத்தம் தெரிவிக்க அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்தை தொடர்பு கொண்டபோது அவரை தொலைபேசியில் தொடர்பு கொள்ள இயலவில்லை என்று கூறியிருக்கிறார் அண்ணாமலை.

இதனை அடுத்து அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இடம் தொலைபேசி மூலம் வருத்தம் தெரிவித்தேன் என்று கூறியதோடு, அதிமுக மீது பாஜகவுக்கு மிகப்பெரிய கடமை இருக்கிறது. நம்முடைய ஆட்சியின் 2019 – 2020 மற்றும் 2021-ஆம் ஆண்டுகளில் முக்கியமான அனைத்து சமயங்களிலும் அதிமுக பாஜகவுடன் துணை நின்றது.

மக்களவை, மாநிலங்களவைகளில் அதற்காக குரல் கொடுத்து நம்முடைய தேசத்திற்கு தேவைப்படும் முக்கியமான சட்டங்கள் நிறைவேற்றப்படும் போதெல்லாம் நம்முடன் துணை நின்றார்கள் என்று கூறினார்.

இவை அனைத்தையும் கடந்து அதிமுக-பாஜக உறவு இயற்கையான ஒன்று இந்த உறவில் எந்தவிதமான காரணத்தை முன்னிட்டும் ஒரு சிறு,சிறு சலனங்கள் கூட வந்து விடக்கூடாது என்று இரண்டு கட்சித் தலைவர்களின் நிலைப்பாடு இருக்கிறது. அதேபோல அதிமுக ஒரு எதிர்க்கட்சியாக மிகவும் சிறப்பாக செயல்பட்டு கொண்டு உள்ளது என்று அவர் கூறியிருக்கிறார்.