நிதி நிறுவனங்கள் கடன் வாங்கியவர்களிடமிருந்து கடனை வசூலிப்பது தொடர்பாக புதிய உத்தரவை ரிசர்வ் வங்கி வெளியிட்டிருக்கிறது.
இது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை ரிசர்வ் வங்கி ஏற்கனவே வெளியிட்டிருக்கிறது. ஆனாலும் அந்த வழிகாட்டு நெறி முறைகளை முறையாக பின்பற்றாததால் நேற்று கூடுதலான உத்தரவுகளை பிறப்பித்திருக்கிறது ரிசர்வ் வங்கி.
வங்கிகள் மற்றும் வாங்கிசார நிதி நிறுவனங்கள் உள்ளிட்டவை தங்களுடைய கடன் வசூல் முகவர்கள் கடன் பெற்றவர்களை எந்த விதத்திலும் வாய்மொழியாகவோ, உடல் ரீதியாகவோ, துன்புறுத்தாமல் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
எந்த வகையிலும் அநாகரிகமான குறுஞ்செய்திகளை அனுப்பக்கூடாது, தொலைபேசியில் மிரட்டல்கள் விடுக்கக் கூடாது, கடன் தவனையை செலுத்த வேண்டும் என்று இரவு 7 மணிக்கு பின்னர் மற்றும் காலை 8 மணிக்கு முன்பாக தொலைபேசியில் தொடர்பு கொள்ளக்கூடாது போன்ற புதிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
இந்த புதிய உத்தரவுகள் அனைத்து வணிக வங்கிகள், கிராமப்புற வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், வங்கி சாரா நிதி நிறுவனங்கள், சொத்து மறு சீரமைப்பு நிறுவனங்கள், அகில இந்திய நிதி நிறுவனங்கள், உள்ளிட்டவற்றுக்கும் பொருந்தும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.