நமது வீட்டிற்கு ஒருவர் வருகிறார் என்றால் அவரை வரவேற்கும் வகையில் நமது வீட்டின் நுழைவு வாயில் மற்றும் வாசல் இருக்க வேண்டும். எப்பொழுதும் சுத்தபத்தமாக நமது வீட்டின் வாசல் இருக்க வேண்டும். வீட்டின் வெளியே உள்ள வாசல் எவ்வாறு உள்ளது என்பதை பொறுத்தே, வீட்டின் உள்ளே நாம் எவ்வாறு வைத்திருப்போம் என்று அனைவரும் அறிந்து கொள்ள முடியும்.
திருமண மண்டபத்தின் முன்பாக எவ்வாறு ஒருவரை வரவேற்கிறாரோ அதே மாதிரி நமது வீட்டிற்கு வருபவரையும் வரவேற்கும் விதமாக, அதாவது வீட்டின் முன்பாக குப்பை மற்றும் செருப்பினை போட்டு வைத்திருக்காமல் சுத்தமாக இருக்க வேண்டும். ஒரு சில வீடுகளை பார்க்கும் பொழுதே அந்த வீட்டின் மங்களகரம் எவ்வாறு உள்ளது என்பது தெரிந்துவிடும்.
அதாவது ஒரு சிலர் அவர்களின் நுழைவு வாயிலில் மாந்தோரணம் மற்றும் கோலங்கள் போட்டு, மஞ்சள் குங்குமம் வைத்து பூவினால் அலங்காரம் செய்து, விளக்குகளை ஏற்றி வைத்திருப்பர். இதனை பார்க்கும் பொழுதே அந்த வீட்டின் மங்களகரம் நமக்கு தெரிந்து விடும். மேலும் அந்த வீடானது லட்சுமி கடாட்சம் நிறைந்த வீடாகவும் திகழும்.
அதேபோன்று ஒரு சில வீடுகளில் நுழைவு வாயிலுக்கு அருகிலேயே தான் குப்பை மற்றும் செருப்புகளை வைத்திருப்பர். அது மட்டுமின்றி பல்வேறு பழைய சாமான்கள் என்று பலவிதமான பொருட்களை நுழைவாயிலுக்கு அருகிலே தான் வைத்திருப்பர். அந்த வீட்டின் நுழைவு வாயிலை பார்க்கும் பொழுதே தெரிந்துவிடும் அந்த வீட்டின் உள்ளே எவ்வாறு இருக்கும் என்று.
முக்கியமாக ஒரு வீட்டின் நுழைவு வாயிலின் முன்பாக வைக்க கூடாதது செருப்பு தான்.
எனவே செருப்பினை விடுவதற்கு என இரண்டு அலமாரிகளை அதிகம் பார்வை படாத இடத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். எப்போதாவது தான் அந்த செருப்பினை எடுப்போம் என்கின்ற செருப்பினை ஒரு அலமாரியிலும், தினமும் பயன்படுத்தக்கூடிய செருப்புகளை ஒரு அலமாரியிலும் வைத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஒரு சில வீடுகளில் வாசல் என்பது பெரியதாக இருக்காது மிக சிறியதாகவே இருக்கும். அவ்வாறு இருப்பவர்கள் செருப்பு வைக்கக்கூடிய அலமாரி மூடி இருக்குமாறு அதாவது பீரோ வடிவில் இருக்குமாறு வாங்கி வைத்துக் கொண்டால் செருப்பு இருப்பது மற்றவர்களின் கண்ணில் படாமல் இருக்கும். இந்த அலமாரிக்கு மேல் இரண்டு பூச்செடிகளை வைத்துக் கொண்டோம் என்றால் அது மிகவும் அழகாக மற்றவர்களின் கண்களுக்கு தெரியும்.
விலை அதிகம் உள்ள செருப்பு அலமாரிகளை வாங்க இயலாதவர்கள் சாதாரண செருப்பு அலமாரியை வைத்துக்கொண்டு அதனை ஒரு நல்ல துணியினை கொண்டு மூடி வைத்துக் கொள்ளலாம். இவ்வாறு செய்யும் பொழுது மற்றவர்களின் கண்களுக்கு செருப்பானது தெரியாமல் இருக்கும். இவ்வாறு வீட்டின் நுழைவு வாயிலை சுத்தமாகவும், லட்சுமி கடாட்சத்துடனும் வைத்துக் கொள்ளும் பொழுது குடும்ப முன்னேற்றம் சிறப்பாக இருக்கும்.