யோசிக்காமல் இதை செய்யுங்கள்! கஷ்டங்களை அரசுக்கு தெரிய படுத்துங்கள் – நடிகர் சூர்யா சிவகுமார்

Photo of author

By Hasini

யோசிக்காமல் இதை செய்யுங்கள்! கஷ்டங்களை அரசுக்கு தெரிய படுத்துங்கள் – நடிகர் சூர்யா சிவகுமார்

தமிழ்நாடு அரசால் நடத்தப்படும் நீட் தேர்வின் மூலம் மருத்துவ சேர்க்கையில் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை ஆராய நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் ஒரு உயர்நிலைக்குழு அமைக்கப்பட்டு உள்ளது. இதற்கு பொது மக்கள் தங்களின் சுய கருத்துகளை 5 பக்கங்களுக்கு மேல் செல்லாமல் [email protected] என்ற மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நீதிபதி ஏ.கே.ராஜன், உயர்நிலைக்குழு, மருத்துவ கல்வி இயக்ககம் (3ம்  தளம்), கீழ்ப்பாக்கம், சென்னை-600010 என்ற முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது நேரடியாக மருத்துவக் கல்வி இயக்குனரகத்தில் வைக்கப்பட்டுள்ள தனிப்பெட்டியிலோ வருகிற 23 ம் தேதிக்குள் பொதுமக்கள் தங்களின் பொதுவான கருத்துக்களை சொல்லுமாறு தமிழக அரசு சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.

இது குறித்து நடிகர் சிவகுமாரின் மகன், ஒரு நடிகராகவும், அகரம் பவுண்டேசனின் நிறுவனருமான சூர்யா, ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதில் மாணவர்கள் இந்த தேர்வினால் அடையும் பாதிப்புகளையும், அவர்களின் குடும்பத்தார் அடையும் துயரங்களையும் ஏ.கே.ராஜன் குழுவினருக்கு அனைவரும் எடுத்துரைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும், அரசுப்பள்ளியில் படித்து பட்டம் பெறுகிற மாணவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு கல்வியே ஆயுதம். இங்கு ஏழைகளுக்கு ஒருவிதமான கல்வி வாய்ப்பும், பணம் படைத்தவர்களுக்கு ஒருவிதமான கல்வி வாய்ப்பும் இருக்கிறது. இருவேறு கல்வி வாய்ப்பு இருக்கிற சூழலில் தகுதியைத் தீர்மானிக்க ஒரே தேர்வுமுறை என்பது சமூக நீதிக்கு எதிரானது என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்தியா போன்ற பல்வேறு மொழி, பண்பாடு, கலாச்சார வேற்றுமைகள் நிறைந்த நாட்டில், கல்வி என்பது மாநில உரிமையாக இருப்பது அவசியம் என்றும் ‘கல்வி மாநில உரிமை’ என்ற கொள்கையில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று சூர்யா தனது அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.