நாம் வண்டியில் ஏற காலை தூக்கி போடும் பொழுது ஒரு விதமான சதை பிடிப்பு பலருக்கும் ஏற்பட்டிருக்கும். அதேபோன்று சிலருக்கு கனமான பொருட்களை தூக்கும் பொழுது இடுப்பு பிடிப்பது, தூங்கி எழும்பொழுது முதுகு பிடிப்பது இதுபோன்ற சதைப்பிடிப்புகள் உடலில் பல்வேறு இடங்களில் ஏற்படும். இது போன்ற சதை பிடிப்புகள் ஏற்படுவதற்கு காரணம் நமது உடலில் சில சத்துக்களின் குறைபாடு ஏற்படுவது தான்.
இதுபோன்ற சதைப்பிடிப்புகளுக்கு எந்த விதமான சத்துக்கள் தேவை என்பதை அறிந்து அந்த உணவுப் பொருட்களை உட்கொள்ளும் பொழுது நமது உடலை சீராக்கிக் கொள்ளலாம். நமது உடலில் அதிகப்படியான வியர்வை வெளியேறும் பொழுது நமது உடலில் உள்ள நீரும் வெளியேறிவிடும். அதே சமயம் நமது சதைகளில் உள்ள நீரும் வெளியேறிவிடும். எனவே அது போன்ற சமயங்களில் நமது உடலுக்கு தேவையான நீரை எடுத்துக் கொள்வதன் மூலம் நமது உடல் மற்றும் சதைகளை நீர் ஏற்றத்துடன் வைத்துக் கொள்ளலாம். அப்பொழுது இந்த சதை பிடிப்பானது ஏற்படாது.
அதே சமயம் நமது உடலில் வியர்வை அதிக அளவில் வெளியேறும் பொழுது எலக்ட்ரோலைட்ஸ் என்கின்ற சத்தும் வெளியேறும். அதாவது எலக்ட்ரோலைட்ஸ் என்பது பொட்டாசியம், மெக்னீசியம், கால்சியம் போன்ற தாது பொருட்களும் நமது வியர்வையுடன் சேர்ந்து வெளியேறும். எனவே இது போன்ற சத்து குறைபாடுகளை அவ்வபோது தீர்த்துக் கொண்டால் இந்த சதைப்பிடிப்பு ஏற்படாது.
இளநீர், வாழைப்பழம், பன்னீர், தயிர் போன்ற பொருட்களில் இந்த சத்துக்கள் காணப்படுகிறது. எனவே சதைப்பிடிப்பு அதிகம் உள்ளவர்கள் இந்த பொருட்களை எடுத்துக் கொள்வதன் மூலம் நமது உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கும். அதேபோன்று தசைகளின் வலுவிற்கு புரதச்சத்தும் மிக அவசியம். எனவே புரதச்சத்து அதிகம் உள்ள முட்டை, மீன் போன்ற பொருட்களையும் அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
வண்டியில் அமரும்பொழுது கால்களில் சதை பிடிப்பு ஏற்பட்டால் ஒரு நாற்காலியில் அமர்ந்து நமது பாதத்தினை மேலும் கீழும் ஆக அசைப்பதன் மூலம் அந்த சதை பிடிப்பானது சற்று சரியாகும். இந்த சதை பிடிப்பானது அதிகப்படியான உடல் உழைப்பு இருந்தாலும் ஏற்படும், அதேசமயம் உடல் உழைப்பு குறைவாக இருந்தாலும் ஏற்படும்.
இதுபோன்ற சில சமயங்களில் மட்டுமே சதைப்பிடிப்பு ஏற்படுகிறது என்றால் அதற்கு தேவையான சத்துக்களை எடுத்துக்கொண்டு நமது உடலை சரி செய்து கொள்ளலாம். ஆனால் ஒரு சிலருக்கு மிக அதிகப்படியான சதை பிடிப்பு அல்லது நரம்பு சுருளுதல் போன்று இருந்தால் அவர்கள் மருத்துவரை அணுகி பார்ப்பது மிகவும் சிறந்தது.