ஒரு தந்தை தனது குழந்தைகளுக்கு பிற்காலத்தில் உதவும் என வீடு கட்டும் பொழுதே நான்கு அல்லது ஐந்து படுக்கை அறைகளை வைத்தவாறு ஒரு வீட்டினை கட்டி விடுகிறார். அவ்வாறு கட்டி அனைத்து அறைகளையும் பயன்படுத்திக் கொண்டு வந்தால் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் பயன்படுத்தாமல் அப்படியே விடுவது தான் தவறு என்று வாஸ்து சாஸ்திரங்கள் கூறுகிறது.
இவ்வாறு அறைகளை பயன்படுத்தாமல் விட்டால் அந்த கட்டிடத்தின் ஒட்டுமொத்த தண்ணீர் குழாய்களையும் பாதிக்கும். துருப்பிடிக்கவும் ஆரம்பித்து விடும். இதனால் அந்த வீட்டில் உள்ளவர்களின் உடல்நிலை பாதிப்புக்கு உள்ளாகும். அந்த வீட்டில் உள்ள தண்ணீர் குழாய்களில் நீரோட்டமானது எங்கும் கசியாமல் நன்றாக இருந்தால் அந்த வீட்டில் உள்ளவர்களின் உடல் நலமும் நன்றாக இருக்கும். மாறாக தண்ணீர் குழாய்களில் ஏர் லாக் போன்ற அடைப்புகள் ஏற்பட்டால் அந்த வீட்டில் உள்ளவர்களுள் யாரேனும் ஒருவருக்கு ரத்தக்குழாய்களில் அடைப்பு போன்ற உடல் நலம் பாதிப்புகளும் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.
அதேபோன்று தண்ணீர் குழாய்களில் நீர் கசிவு இருந்தால் யூரின் டிராக்கை பாதிக்கும். அதாவது அந்த வீட்டில் உள்ள குழந்தைகள் படுக்கையிலேயே சிறுநீர் கழித்து விடுவார்கள் அல்லது பெரியோர்கள் இந்த மாதிரியான பிரச்சனைகளை செய்து விடுவார்கள். எனவே வீடு தான் நீங்கள், நீங்கள் தான் வீடு என்பதை காத்துக் கொள்ள வேண்டும். அதாவது வீட்டில் ஏதேனும் வாஸ்து பிரச்சனைகள் இருந்தால் அந்த குடும்பத்திலும் பிரச்சினைகள் ஏற்படும்.
நாம் தற்பொழுதும் பொதுவாக ஒரு வார்த்தையை கேட்டிருப்போம் அதாவது ஒரு வீட்டில் தண்ணீர் ஒழுகி கொண்டே இருந்தால் அந்த வீட்டில் உள்ள செல்வமும் ஒழிகிக்கொண்டே போய்விடும். இதற்கு அர்த்தம் என்னவென்றால் ஒரு வீட்டில் தண்ணீர் லீக்கேஜ் இருந்தால் அந்த குடும்பத்தில் உள்ளவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு அதனால் விரைய செலவுகள் ஏற்படும் என்பது தான் அர்த்தம்.
அதே போன்று ஒரு வீட்டில் அரசமரம் வளர்கிறது என்றால் அது அந்த வீட்டில் உள்ள ஆண்களின் வலிமையை குறைத்து விடும் எனவே அரச மரம் வீட்டின் சுவற்றிற்கு இடையில் வளர்கிறது அல்லது வீட்டின் முன்பு வளர்கிறது என்றால் அதனை அகற்றி விடுவது நல்லது. அதேபோன்று வேப்பமரம் இருந்தால் பெண்களின் வலிமை குறைந்து இருக்கும்.
நமது வீட்டில் மாடித்தோட்டம் வைக்கிறோம் என்றால் வீட்டின் தென்மேற்கு மூலையில் மட்டுமே அதிக கனத்தினை வைக்க வேண்டும். அதை தவிர்த்து வேறு மூலைகளில் மாடித்தோட்டமோ அல்லது வேறு ஏதேனும் ஒரு அதிக கனத்தினையோ கொண்டு வைத்தால் அது அந்த வீட்டில் உள்ளவர்களின் உடல்நலத்தை பாதிக்கும் என்று வாஸ்து கூறுகிறது.
ஒரு வீட்டினை கட்டி விட்டு அதனை பயன்படுத்தாமல் அப்படியே விட்டாலும் கூட அந்த வீட்டிற்கு வாரத்திற்கு ஒரு முறையாவது சென்று கதவு ஜன்னல்களை திறந்து விட்டு சூரிய ஒளி உள்ளே வருமாறு செய்ய வேண்டும். அதே சமயம் தண்ணீர் குழாய்களில் அடைப்பு ஏற்படாமல் இருக்கிறதா என்பதையும் சரிபார்த்துக்கொள்ள வேண்டும். நாம் நம்மை எவ்வாறு பராமரித்து கொள்கிறோமோ அதே போன்று நமது வீடுகளையும் பராமரித்துக்கொண்டால் நமது உடல் நலத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.