பப்பாளி மரம் என்றாலே அதில் உள்ள பழம் நமது கண்களுக்கு மிகவும் நல்லது என்று தான் நாம் அறிந்திருப்போம். ஆனால் அந்த மரத்தின் இலை எவ்வளவு சத்துக்கள் நிறைந்தது என்பதை நம்முள் பலரும் அறியாமல் இருப்போம். இந்த பப்பாளி இலையில் அத்தியாவசிய சத்துக்களான ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் மற்றும் பயோ ஆக்டிவ் கலவைகள் உள்ளன. இத்தகைய சத்துக்கள் நிறைந்த இலையை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து குடிப்பதன் மூலம் நமது உடலுக்கு கிடைக்கக்கூடிய நன்மைகளைப் பற்றி தற்போது காண்போம்.
இந்த சத்து மிகுந்த பப்பாளி இலை சாற்றினை எவ்வாறு தயாரிப்பது என்பதனை முதலில் காண்போம். ஐந்து பப்பாளி இலையினை தண்ணீரில் அலசி நறுக்கிக் கொள்ள வேண்டும். அதனை கொதிக்கும் நீரில் 10 முதல் 15 நிமிடம் போட்டு அப்படியே விட வேண்டும். தண்ணீர் பச்சை நிறமாக மாறியதும் அதனை வடிகட்டி ஆறவிட வேண்டும். இதன் கசப்பு சுவையை போக்க தேன் அல்லது எலுமிச்சை சாற்றினை சேர்த்துக் கொள்ளலாம்.
பப்பாளி இலையில் விட்டமின் சி விட்டமின் ஈ மற்றும் ஏராளமான ஃப்ளாவனாய்டுகள் உள்ளன. அவை ஆக்சிஜனேற்ற அழுத்தத்தில் இருந்து உடலை பாதுகாப்பதோடு, செல்கள் சேதம் அடைவதை தடுக்கவும் உதவுகிறது. மேலும் இவை இதய நோய், நீரிழிவு நோய் மற்றும் சில புற்றுநோய் அபாயத்தை குறைக்கவும் பயன்படுகிறது.
பப்பாளி இலை செரிமானத்திற்கு மிகவும் நல்லது. மேலும் குடல் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கவும் பயன்படுகிறது. குறிப்பாக வயிறு உப்புசம், மலச்சிக்கல் மற்றும் எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் பெறவும் இது உதவுகிறது. இந்த இலையில் Acetogenins கலவை இருப்பதால் கல்லீரலில் உள்ள தீங்கு விளைவிக்கும் நச்சுக்களை வெளியேற்ற இது பயன்படுகிறது. மேலும் இது கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவுகிறது.
பப்பாளி இலை நமது சருமத்திற்கும் பலவிதமான நன்மைகளை தருகிறது. இதில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் மற்றும் விட்டமின்கள் ஆரோக்கியமான சருமத்திற்கு வழிவகுக்கும். கொலாஜன் உற்பத்தியை ஊக்குவிக்கவும், சருமங்களின் செல் சேதங்களை சரி செய்யவும் இது பயன்படுகிறது. இது தவிர தோல் சுருக்கங்கள் மற்றும் கோடுகள் போன்ற வயதான அறிகுறிகள் தோன்றுவதையும் தாமதமாகும்.
பப்பாளி இலையில் இயற்கையாகவே இரத்த சர்க்கரை அளவை குறைக்கும் பண்பு உள்ளது. இது இன்சுலின் உணர் திறனை மேம்படுத்தி, நீரிழிவு நோயை கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும் இந்த இலையில் விட்டமின் ஏ, சி போன்ற எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இது தவிர வலுவான ஆன்டிஆக்சிடென்ட் மற்றும் அலர்ஜி எதிர்ப்பு கலவைகள் இருப்பதால் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக பயன்படுகிறது.
இத்தகைய பலன்களை தரக்கூடிய பப்பாளி இலை தண்ணீரை வாரத்திற்கு மூன்று முறை ஒரு கப் அளவிற்கு குடித்து வரலாம். சிறந்த பலனை பெற காலை நேரத்தில் குடிக்க வேண்டும். அதேபோன்று மருத்துவரின் ஆலோசனையின் படி குடிப்பதும் நல்லது.