மருத்துவர்களுக்கு இரண்டு இடத்தில் பணி உத்தரவு! நோயாளிகள் உயர் சிகிச்சை பெறுவதில் சிக்கல்!!
சென்னையில் ஓமந்தூரார் பல்நோக்கு அரசு மருத்துவமனையில் இருக்கும் தலைமை மருத்துவர்களுக்கு இரண்டு இடங்களில் பணி செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் நோயாளிகள் உயர் சிகிச்சை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் பணிபுரியும் தலைமை மருத்துவர்களுக்கு சென்னை கிண்டி மருத்துவமனையிலும் பணி தரப்பட்டுள்ளது.
சென்னை கிண்டியில் இரண்டு நாட்களுக்கு முன்னர் கிண்டி கிங் ஆய்வக வளாகத்தில் உயர் சிறப்பு பல்நோக்கு மருத்துவமனை நேற்று முன்தினம் திறக்கப்பட்டது. புறநோயாளிகள் பிரிவில் நேற்று முதல் அதாவது ஜூன் 16ம் தேதி முதல் சிகிச்சை தொடங்கப்பட்டுள்ளது. முதல் நாளான நேற்று 48 நோமாளிகள் சிகிச்சை பெற்றனர். போதிய அளவில் மருத்துவர்கள், நர்ஸ்கள், மருந்து மாத்திரைகள், மருத்துவ உபகரணங்கள் இருப்பதால் படிப்படியாக அனைத்து உயர் சிகிச்சைகளும் அளிக்கப்படும் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் சென்னை ஓமந்தூரார் அரசு தலைமை மருத்துவர்களுக்கு கிண்டி மருத்துவமனையிலும் பணி வழங்கப்பட்டுள்ளது. ஓமந்தூரார் அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர்கள் இரண்டு மருத்துவமனையின் இளநிலை மருத்துவர்களுக்கு ஒருங்கிணைப்பு அதிகாரி போல செயல்படவுள்ளனர். இதையடுத்து தலைமை மருத்துவர்களிடம் இருந்து நோயாளிகள் நேரடியாக சிகிச்சை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மக்கள் நலவாழ்வுத்துறை அதிகாரிகள் இது குறித்து கூறுகையில் சீனியர் டாக்டர்கள்(தலைமை மருத்துவர்கள்), மருத்துவர்கள் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. அந்த பணிகள் முடிந்த பிறகு இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். இன்னும் ஒன்று அல்லது இரண்டு மாதங்கள் வரை இந்த நிலை தொடரும்” என்று கூறியுள்ளனர்.