730 கிராம் எடையுடன் பிறந்த ஆண்குழந்தையை தீவிர சிகிச்சையளித்து காப்பாற்றிய  மருத்துவர்கள்!!

0
100
#image_title

730 கிராம் எடையுடன் பிறந்த ஆண்குழந்தையை தீவிர சிகிச்சையளித்து காப்பாற்றிய  மருத்துவர்கள்!!

கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில், 730 கிராம் எடையுடன் பிறந்த ஆண்குழந்தையை தீவிர சிகிச்சையளித்து மருத்துவர்கள் காப்பாற்றினர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அடுத்த பாஞ்சாலி நகரை சேர்ந்தவர் முத்துமீனாட்சுமி, 19. திருமணமாகி கருவுற்ற இவருக்கு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், முத்துமீனாட்சிக்கு, 28 வார கர்ப்ப காலத்திலேய பிரசவ வலி ஏற்பட்டு, கடந்த ஏப்.,12ல், ஆண் குழந்தை பிறந்தது. குறை பிரசவத்தில் பிறந்த குழந்தையின் எடை, 730 கிராம் மட்டுமே இருந்தது. உடனடியாக குழந்தையை அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் பூவதி உத்தரவிட்டார்.

இதையடுத்து மருத்துவ கண்காணிப்பாளர் சந்திரசேகர், மகப்பேறு தலைமை மருத்துவர் கவிதா, டாக்டர்கள் மது, செல்வி, பழனி உள்ளிட்ட மருத்துவக்குழுவினர் குழந்தையை தீவிரமாக கண்காணித்து வந்தனர். மூச்சுத்திணறல், நுரையீரல் வளர்ச்சி குறைவால் அவதியுற்ற குழந்தைக்கு ‘சர்பேக்ணன்ட்’ என்ற விலையுயர்ந்த சிறப்பு மருந்துகளுடன், சுவாசக்கருவி உதவியுடன் சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் குழந்தை இன்று சுவாசக்கருவியின்றி சுவாசித்ததுடன், தாய்ப்பாலும் குடிக்க துவங்கியது. தற்போது, 1 கிலோ எடையுடன் உள்ள அந்த குழந்தைக்கு, விழித்திரை, செவி, மூளைக்கு செல்லும் ரத்த ஓட்ட பரிசோதனை செய்யப்பட்டு அனைத்தும் சீராக இருப்பதும் தெரிந்தது. இதையடுத்து குழந்தையை பெற்றோரிடம் மருத்துவகுழுவினர் ஒப்படைத்தனர்.

author avatar
Savitha