உங்கள் குடும்பத்தில் உள்ள யாருக்கேனும் கேன்சர் இருக்கிறது என்றால் மற்றவருக்கும் அது வருமா என்று சந்தேகம் பலருக்கும் உண்டு. இந்த சந்தேகம் மட்டுமல்லாமல் அந்த குடும்பத்தில் மற்றவருக்கும் கேன்சர் வரப் போவதை எப்படி கண்டுபிடிப்பது? ஒருவேளை கேன்சர் வரப்போகும் நிலை இருந்தால் அதனை எவ்வாறு தடுப்பது? கேன்சரால் பாதிக்கப்பட்ட குடும்பத்தில் திருமணம் செய்து கொள்ளலாமா? கேன்சர் வந்த ஒருவர் உடல்நிலை சரியான பின்பு திருமணம் செய்து கொள்ளலாமா? அவ்வாறு திருமணம் செய்யவில்லை என்றால் எப்பொழுது திருமணம் செய்து கொள்வது? என்ற பல சந்தேகங்கள் நம்மில் பலருக்கும் உண்டு. அதற்கான விளக்கத்தினை தான் தற்போது காணப் போகிறோம்.
பொதுவாக ஒருவருக்கு கேன்சர் வருவதற்கு பலவிதமான காரணங்கள் உள்ளது. மரபணுவால் உருவாகக்கூடிய கேன்சர் மட்டுமே ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்கு பரவும். மற்ற காரணங்களால் உருவாகக்கூடிய கேன்சர் அந்த குடும்பத்தில் உள்ளவருக்கு பரவாது. ஆனால் இந்த மரபணு ஜீன்களால் உருவாகக்கூடிய கேன்சர் என்பது நூறில் ஐந்து பேருக்கு மட்டுமே வருகிறது. மற்ற அனைவருக்கும் பல விதமான காரணங்களால் கேன்சர் உருவாகிறது.
ஒருவருக்கு கேன்சர் இருப்பது உறுதி செய்யப்பட்டால் அவருக்கு எதனால் கேன்சர் உருவானது என்பதை மருத்துவர்கள் ஆராய்ந்து பார்ப்பர். மருத்துவர்கள் முதலில் மரபணுவால் இந்த நபருக்கு கேன்சர் உருவானதா என்பதை தான் ஆராய்ந்து பார்ப்பர். அதற்கு எந்த வயதில் அவருக்கு கேன்சர் வந்துள்ளது? அவரது குடும்பத்தில் வேறு யாருக்கும் கேன்சர் இருக்கிறதா? எந்தவிதமான பிரச்சனை அவருக்கு இருக்கிறது? ஒரு காரணத்தால் மட்டும்தான் கேன்சர் வந்துள்ளதா, இல்லை பல காரணங்களால் கேன்சர் வந்துள்ளதா? என்பதை எல்லாம் ஆராய்ந்த பின்னரே அவருக்கு மரபணுவால் கேன்சர் உருவானதா என்பதை கண்டறிவர்.
ஒருவேளை இந்த ஆராய்ச்சியில் அவருக்கு மரபணுவால் தான் கேன்சர் உருவானது என்பதை கண்டறிந்து விட்டால் அவரது குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் மரபணு டெஸ்ட் ஐ எடுக்க வேண்டும். அப்பொழுதுதான் மற்ற யாருக்கேனும் கேன்சர் இருந்தால் ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து சரி செய்து கொள்ள முடியும். மரபணு காரணம் இல்லாமல் வேறு வகையில் கேன்சர் உருவாகி இருந்தால் அது குடும்பத்தில் உள்ள மற்ற யாருக்கும் பரவாது.
கேன்சர் உள்ள குடும்பத்தில் திருமணம் செய்து கொள்ளலாமா என்ற சந்தேகம் பலருக்கும் உண்டு. மரபணுவால் கேன்சர் உருவாவது என்பது மிகக் குறைவான அளவிலே இருப்பதால் அந்த குடும்பத்தில் உள்ளவரை திருமணம் செய்து கொள்ளலாம். ஆனால் இந்த சமூகத்தில் கேன்சர் உள்ள குடும்பத்தில் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்ற தவறான கண்ணோட்டம் உள்ளது.
கேன்சர் பற்றிய தவறான கண்ணோட்டத்தை மக்களிடம் இருந்து நீக்க வேண்டும். ஏனென்றால் மரபணு கேன்சர் உருவாவது மிகவும் குறைவான எண்ணிக்கையிலேயே தற்போது உள்ளது. எனவே மற்ற யாருக்கும் அது பரவுவதற்கான வாய்ப்பு குறைவுதான். இது குறித்த விழிப்புணர்வு மக்களுக்கு கண்டிப்பாக வேண்டும். ஏனென்றால் கேன்சரால் பாதிக்கப்பட்டவர்கள் ஏற்கனவே மனதளவிலும், உடலளவிலும் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பார்கள். ஆனால் மக்கள் மேலும் அவர்களை துன்பத்திற்கு ஆளாக்குகின்றனர். எனவே இந்த சமுதாய மக்கள் கேன்சர் குறித்த தவறான கண்ணோட்டத்தை நீக்கிக் கொள்ள வேண்டும்.