கடந்த சில மாதங்களாக பாமகவின் மேல் மட்ட தலைவர்களிடம் அதிகார பகிர்வு சார்ந்து கருத்து வேறுபாடுகள் நிலவி வந்தன. பாமக நிறுவனர் தனது மகள் வழி பேரனான முகுந்தனை அன்புமணி ராமதாஸ் இதற்கு முன் வகித்து வந்த இளைஞர் அணி தலைவர் பதவிக்கு நியமித்த நாள் இந்த அதிகார பிரச்சனை வெளி உலகத்துக்கு தெரிய வந்தது. இதனையடுத்து தனி அலுவலகத்தை திறந்த அன்புமணி ராமதாஸ் தன்னை சந்திப்பவர்கள் அங்கு வந்து பார்க்கலாம் என அறிவித்தது அடுத்த சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனையடுத்து அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டாலும் கட்சி நிர்வாகிகளை அவர் தனியே சந்திப்பதை தொடர்ந்து வந்தார், இந்நிலையில் தைலாபுரம் தோட்டத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த மருத்துவர் ராமதாஸ் பாமக தலைவர் பதவியில் தானே தொடர்வதாகவும், அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு செயல் தலைவர் பதவி வழங்குவதாகவும் அறிவித்தார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி ராமதாஸை கட்சியின் தலைவர் பதவியில் இருந்து நீக்கி, அவரை செயல் தலைவராக நியமித்துள்ள இந்த விவகாரம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்த முடிவை எடுக்க ராமதாஸுக்கு அதிகாரம் உள்ளதா என்ற கேள்வியும் தமிழக அரசியலில் எழுந்துள்ளது.
பாமக விதிகளின்படி, தலைவர் பதவியில் மாற்றங்களை செய்ய பொதுக்குழுவிற்கே அதிகாரம் உள்ளது. 2022 ஆம் ஆண்டு மே மாதத்தில் நடைபெற்ற சிறப்பு பொதுக்குழுவில், அன்புமணி ராமதாஸ் தலைவர் பதவிக்கு நியமிக்கப்பட்டார். எனவே, அவரை நீக்க பொதுக்குழுவின் அனுமதி அவசியம். இந்நிலையில் கட்சியின் நிர்வாகிகள் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிவிப்பின் படி செயல்படுவார்களா அல்லது அன்புமணி அவர்களின் கட்டளைப்படி செயல்படுவார்களா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.
அந்த வகையில் இந்த அறிவிப்பு, கட்சியின் உள் விவகாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் இது குறித்து அன்புமணி ராமதாஸ் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. கட்சியின் விதிகளின்படி, ராமதாஸின் இந்த அறிவிப்பு செல்லாது எனவும், தேர்தல் ஆணையம் இதை ஏற்காது எனவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் அன்புமணி ராமதாஸ் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் வரை, இந்த விவகாரம் தொடர்ந்தும் சர்ச்சையை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கருத்து ஒற்றுமை ஏற்படாத பட்சத்தில் பாமக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆதரவு யாருக்கு என தமிழக அரசியலில் இந்த அறிவிப்பானது அடுத்தடுத்த எதிர்பார்ப்புகளை உருவாக்கும் என்றும் கருதப்படுகிறது.