பள்ளி சேரும் மாணவர்களிடம் மாற்றுச் சான்றிதழ்(TC) கேட்கக் கூடாது – சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!!
கடந்த சில ஆண்டுகளாக அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.காரணம் உலகம் முழுவதும் பரவிய கொரோனாவால் பலரது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் நிலைக்கு தள்ளப்பட்டது.
வேலையிழப்பு,விலைவாசி உயர்வு போன்ற காரணங்களால் தனியார் பள்ளியில் பயின்று வந்த மாணவர்களின் பெற்றோரால் கல்விக் கட்டணம் செலுத்த முடியாமல் போனது.இதனால் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க பெற்றோர்கள் ஆர்வம் காட்டினர்.
சிலர் பாக்கி கல்விக் கட்டணத்தை செலுத்தி மாற்றுச்சான்றிதழ் பெற்று அரசுப் பள்ளியில் தங்கள் பிள்ளைகளை சேர்த்தனர்.ஆனால் பெரும்பாலான பெற்றோரால் உரிய கல்விக் கட்டணத்தை செலுத்த முடியாமல் போனது.இதனால் மாற்றுச்சான்றிதழ் இல்லாமல் மாணவர்களை பள்ளிகளில் சேர்த்துக் கொள்ள வேண்டுமென்று பள்ளி கல்வித்துறை தெரிவித்தது.இதனால் ஏராளமான தனியார் பள்ளி மாணவர்களால் எளிதில் அரசுப் பள்ளிகளில் சேர முடிந்தது.
இந்நிலையில் பள்ளி கல்வித்துறையின் இந்த உத்தரவை எதிர்த்து அகில இந்திய தனியார் பள்ளிகள் சட்ட பாதுகாப்பு சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குதொடரப்பட்டது .இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி வேறொரு பள்ளிகளில் சேர விரும்பும் மாணவர்கள் மாற்றுச் சான்றிதழ் கோரி தற்போது பயிலும் பள்ளிகளில் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் மாணவர்களிடம் இருந்து பெற்ற விண்ணப்பங்களை சரிபார்த்து ஒரு வாரத்தில் மாற்றுச் சான்றிதழ் வழங்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுருக்கிறார்.
மேலும் ஒரு பள்ளியில் இருந்து வேறு பள்ளிக்கு மாறிச் செல்லும் மாணவர்களிடம் மாற்றுச் சான்றிதழ் கேட்கக் கூடாது என்றும் மாற்றுச் சான்றிதழ் ஒரு ஆவணம் தானே தவிர அதை கட்டண பாக்கி வசூலிக்க கூடிய கருவியாக பயன்படுத்தக் கூடாது என்று குறிப்பிட்டார்.
மேலும் வேறு பள்ளிக்கு செல்லும் மாணவர்களிடம் மாற்றுச் சான்றிதழ் சமர்ப்பிக்கும் படி நிர்பந்திக்க கூடாது என்று தமிழகத்தில் செயல்பட்டு வரும் அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை பிறப்பிக்க பள்ளிக் கல்வித் துறைக்கு உயர்நீதிமன்ற நீதிபதி அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.