தடுப்பூசியை எக்காரணத்தைக் கொண்டும் போட்டுக்காதீங்க! வைரலாகும் சீமானின் பேச்சு…!

Photo of author

By Mithra

தடுப்பூசியை எக்காரணத்தைக் கொண்டும் போட்டுக்காதீங்க! வைரலாகும் சீமானின் பேச்சு…!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவி வருவதால் தடுப்பூசி கண்டுபிடித்து உடனடியாக மக்களுக்கு செலுத்தும் முயற்சியில் அனைத்து நாடுகளும் ஈடுபட்டு வருகின்றன. ஒருசில நாடுகளின் நிறுவனங்கள் தயாரித்த தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு போடப்பட்டு வருகின்றன.

இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு போடப்பட்டு வருகிறது. தடுப்பூசிகள் பாதுகாப்பானது என வல்லுநர்களும், அரசியல் கட்சித் தலைவர்களும் தாங்கள் போட்டுக்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், நகைச்சுவை நடிகர் சின்ன கலைவாணர் விவேக் தடுப்பூசி போட்டுக்கொண்ட அடுத்த நாள் மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, இரண்டாம் நாள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு உடல்நலக்குறைவே காரணம் என்றும், தடுப்பூசி காரணம் இல்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதே நேரத்தில், தடுப்பூசியின் நம்பகத்தன்மை குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிய பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அந்த வீடியோவில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், தடுப்பூசியை போட்டுக்கோள்ள வேண்டாம் என மருத்துவர்கள் தெரிவித்ததாக கூறினார். அமெரிக்கா, பிரிட்டனில் உள்ள மருத்துவர்கள், தன்னுடைய தம்பிகள் ஆயிரக்கணக்கானோர் மருத்துவர்களாக இருப்பதாக கூறிய அவர், எக்காரணத்தைக் கொண்டும் தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டாம் எனக் கூறியதாகவும், தங்களது பிள்ளைகளுக்கு தடுப்பூசி போட வேண்டாம் என்றும் கூறியதாக தெரிவித்தார்.

ஏற்கனவே சமூக வலைதளங்களில் தடுப்பூசி குறித்து ஏராளமான கருத்துக்கள் பரவி வரும் நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிய பேச்சு வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.