விழுப்புரத்தில் மாணவியை உயிருடன் எரித்துக் கொலை செய்த கொடியவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க ராமதாஸ் கோரிக்கை

Photo of author

By Ammasi Manickam

விழுப்புரத்தில் மாணவியை உயிருடன் எரித்துக் கொலை செய்த கொடியவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க ராமதாஸ் கோரிக்கை

விழுப்புரத்தில் மாணவியை உயிருடன் எரித்துக் கொலை செய்த வழக்கில் கொலை செய்த கொடியவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகிலுள்ள சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்த அதிமுகவின் கிளைக் கழகச் செயலாளர் கலியபெருமாள்-முன்னாள் கவுன்சிலர் முருகன் ஆகியோர் முன் பகை காரணமாக ஜெயபால் என்பவரின் மகளான பள்ளி மாணவியை கை – கால்களைக் கட்டிய நிலையில், வாயில் துணி வைத்து தீவைத்துக் கொளுத்தி கொலை செய்த கொடூரச் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட மாணவியை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அந்த சிறுமி இன்று உயிரிழந்துள்ளார். இந்த கொலைக்கு காரணமான கொலையாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தன்னுடைய ட்விட்டர் பதிவு மூலம் கண்டனம் தெரிவித்துள்ளார்.இது பற்றி அவருடைய ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய் நல்லூரை அடுத்த சிறுமதுரை கிராமத்தை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி முன் பகை காரணமாக பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொல்லப்பட்ட நிகழ்வு அதிர்ச்சியளிக்கிறது. இது கொடூரமான செயல். மகளை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.

ஆயிரம் முன்பகை இருந்தாலும் மனிதமும், இதயமும் உள்ளவர்களால் வாழ வேண்டிய சிறுமியை உயிருடன் எரிக்கும் குரூரத்தை அரங்கேற்ற முடியாது. இதற்கு காரணமானவர்களுக்கு விரைந்து தண்டனை வழங்கப்பட வேண்டும். அது இத்தகைய கொடியவர்களுக்கு பாடமாக அமைய வேண்டும்!