விலைமதிப்பற்ற பழங்கால சிலைகள் சீரழிவதை அனுமதிக்கக் கூடாது! மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்
உலகின் அனைத்து நாடுகளும் ஏங்கக்கூடிய கலைச் சின்னங்கள் நம்மிடம் இருக்கும் நிலையில், அவற்றை பாதுகாக்க சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 1250-க்கும் மேற்பட்ட விலைமதிப்பற்ற பழங்கால சிலைகள் எந்தவித பாரமரிப்பும் இல்லாமல், வாகனங்கள் நிறுத்துமிடங்களிலும், வெட்ட வெளியிலும் குப்பைகளைப் போல கிடத்தி வைக்கப்பட்டிருப்பதாக தி இந்து ஆங்கில நாளிதழில் வெளியாகியுள்ள செய்தி மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. உலகப்புகழ் பெற்ற சிலைகளுக்கும், பிற கலைச் சின்னங்களுக்கு சென்னையில் பாதுகாப்பு மிக்க ஓர் இடம் ஒதுக்கப்படாதது வருத்தம் அளிக்கிறது.
சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களிலுள்ள சிலரின் வீடுகளிலும், பண்ணைத் தோட்டங்களிலும் கடந்த 2016-17 ஆம் ஆண்டுகளில் சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவினர் நடத்திய சோதனைகளில் ஏராளமான பழங்கால சிலைகள், கற்சிலைகள், மரச்சிற்பங்கள் கைப்பற்றப்பட்டன. இது தொடர்பாக ஏராளமான தொழிலதிபர்கள் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்ய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட சிலைகளில் மதிப்பு பலநூறு கோடி ரூபாய் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. அத்தகைய சிலைகள் அவற்றுக்குரிய மதிப்புடன் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், கிண்டியில் சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு அலுவலகம் அமைந்துள்ள பொருளாதாரக்குற்றப்பிரிவு தலைமை அலுவலகத்தின் தரைத்தளத்தில் எந்தவித பாதுகாப்புமின்றி குவித்து வைக்கப்பட்டுள்ளன.
பறிமுதல் செய்யப்பட்ட சிலைகளின் மதிப்பு பலநூறு கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, சிலைக்கடத்தல் மற்றும் சிலை பதுக்கல் தொடர்பான வழக்குகளுக்கு அவை தான் முக்கிய ஆதாரம் ஆகும். ஆனால், சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் அவை வைக்கப்பட்டுள்ள நிலையைப் பார்க்கும் போது, அவற்றை யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் எளிதாக எடுத்துச் செல்ல முடியும் என்றே தோன்றுகிறது. இது சிலைகளுக்கு மட்டுமின்றி, சிலைக்கடத்தல் தொடர்பான வழக்குகளுக்கும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். இந்த ஆபத்து தடுக்கப்பட வேண்டும்.
வெட்ட வெளியில் எந்த பாதுகாப்புமின்றி வைக்கப்பட்டுள்ள சிலைகள் வெயிலிலும், மழையிலும் கிடக்கும் போது அவை பல்வேறு வேதிவினைகளுக்கு உள்ளாகும். இதனால் சிலைகள் அழகையும், சிறப்பம்சங்களையும் இழந்து சாதாரணமான கற்களாகவும், மரத்துண்டுகளாகவும் மாறிவிடக்கூடும். மழையில் நனைந்து, வெயிலில் காயும் போது மரச்சிலைகளில் வெடிப்பு ஏற்படும். இந்த சிலைகளில் உள்ள சிறப்பம்சங்களுக்காகத் தான் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு கடத்திச் செல்லப்படுகின்றன. அத்தகைய சிறப்புமிக்க சிலைகளை அலட்சியத்தால் இழந்து விடக் கூடாது.
குற்ற வழக்குகள், கடத்தல் வழக்குகள் ஆகியவற்றில் பறிமுதல் செய்யப்பட்ட இரு சக்கர ஊர்திகள், மகிழுந்துகள், சரக்குந்துகள் உள்ளிட்ட வாகனங்களின் கதி என்ன? என்பதை அனைவரும் அறிவார்கள். அவை வெயிலிலும், மழையிலும் கிடந்து துருப்பிடித்து வீணாகின்றன. பல வாகனங்களின் சக்கரங்கள், எஞ்சின்கள் கூட திருடப்படுகின்றன. இவ்வாறாக மிகப்பெரிய அளவிலான பொருளாதாரம் யாருக்கும் பயன்படாமல் போகும். விலைமதிப்பற்ற சிலைகளுக்கும் அதே நிலை ஏற்பட்டு விடாமல் தடுக்க வேண்டும்.
பறிமுதல் செய்யப்பட்ட சிலைகள் விலை மதிப்பற்றவை என்பது மட்டுமின்றி, கலைநயமும் மிக்கவை ஆகும். ஆகவே, இந்த சிலைகளைக் கொண்டு ஓர் அருங்காட்சியகம் அமைத்து, ஒவ்வொரு சிலையின் வரலாற்றையும் அதற்கு அருகில் இடம் பெறச் செய்தால் அது அனைவரின் வரவேற்பையும் பெற்று, சுற்றுலா முக்கியத்துவம் கொண்ட இடமாக மாறக்கூடும். அத்தகையக் கலைக்கூடம் சென்னையின் இன்றையத் தேவையும் கூட. பறிமுதல் செய்யப்பட்ட சிலைகளை பாதுகாத்து வைக்க திருவான்மியூர், திருவொற்றியூர் ஆகிய பகுதிகளில் இடங்கள் அடையாளம் காணப்பட்டதாகவும், நிர்வாகச் சிக்கல்கள் காரணமாக அம்முயற்சியில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்றும் கூறப்படுகிறது. கடைசியாக கபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான இடம் அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும், சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவினர் முறைப்படி விண்ணப்பித்து அதை பெற்றுக்கொள்ளலாம் என்றும் இந்து சமய அறநிலையத்துறை கூறியுள்ளது.
உலகின் அனைத்து நாடுகளும் ஏங்கக்கூடிய கலைச் சின்னங்கள் நம்மிடம் இருக்கும் நிலையில், அவை பராமரிப்பின்றி சீரழிவதை அனுமதிக்கக்கூடாது. கபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான நிலத்தை முறைப்படி பெற்று, அதில் அருங்காட்சியகம் அமைத்து விலைமதிப்பற்ற சிலைகளை பாதுகாக்க சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன் என்றும் அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.