மத்திய மாநில அரசுத்துறைகளில் காலி பணியிடங்களை நிரப்பாமல் சமூகநீதிக்கு பெருந்துரோகம் இழைப்பதாக மருத்துவர் ராமதாஸ் குற்றச்சாட்டு

0
154

மத்திய மாநில அரசுத்துறைகளில் காலி பணியிடங்களை நிரப்பாமல் சமூகநீதிக்கு பெருந்துரோகம் இழைப்பதாக மருத்துவர் ராமதாஸ் குற்றச்சாட்டு

மத்திய மற்றும் மாநில அரசு அலுவலகங்களில் கடந்த 2 ஆண்டுகளில் 65% காலி பணியிடங்கள் அதிகரிதுள்ளதால் உடனடியாக மத்திய
அரசு காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

மத்திய அரசுத் துறைகள் மற்றும் அமைச்சகங்களில் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை கடந்த இரு ஆண்டுகளில் 65% அளவுக்கு அதிகரித்திருப்பதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியளிக்கிறது. தொடர்வண்டித்துறை உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களில் ஏற்பட்ட காலியிடங்களும் இதுவரை முழுமையாக நிரப்பப்படாதது வேலையில்லாத இளைஞர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

மத்திய நிதி அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் செலவினங்கள் துறை வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களில் தான் இந்த தகவல்கள் இடம் பெற்றுள்ளன. மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களின் எண்ணிக்கை 2016-ஆம் ஆண்டு மார்ச் நிலவரப்படி 4 லட்சத்து 12,752 ஆக இருந்தது. 2018 மார்ச் நிலவரப்படி இது 6 லட்சத்து 83,823 ஆக அதிகரித்திருக்கிறது. அதாவது மத்திய அரசு துறைகளில் காலி பணியிடங்களின் எண்ணிக்கை 2 ஆண்டுகளில் 2 லட்சத்து 71,071 (65%) அதிகரித்திருக்கிறது. மத்திய அரசு துறைகள் மற்றும் நிறுவனங்களில் உள்ள மொத்த பணியிடங்களின் எண்ணிக்கை 38 லட்சத்து 2,779 ஆகும். இது கடந்த ஆண்டு மார்ச் நிலவரப்படி 31 லட்சத்து 18,956 ஆக குறைந்து விட்டது. மத்திய அரசுத் துறைகளில் 18 விழுக்காட்டுக்கும் கூடுதலான பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக இருப்பது இந்திய வரலாற்றில் இதுவே முதல்முறை.

உலகின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனம் என்ற பெருமைக்குரிய தொடர்வண்டித்துறையில் மட்டும் 2 லட்சத்து 59,369 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த புள்ளி விவரங்கள் கடந்த ஆண்டு மார்ச் மாத நிலவரப்படியானது தான் என்றாலும் கூட, அதற்கு பிறகும் காலியிடங்கள் குறிப்பிடத்தக்க அளவில் நிரப்பப்படவில்லை என்பது தான் உண்மை. நாட்டின் பாதுகாப்புடன் தொடர்புடைய இராணுவம், துணை இராணுவப் படைகள் ஆகியவற்றிலும் 2 லட்சத்திற்கும் அதிகமான பணிகள் காலியாக உள்ளன.

உலக அளவில் மக்கள்தொகை அதிகமுள்ள நாடுகளில் ஒன்று என்பதைப் போலவே வேலைவாய்ப்புத் திண்டாட்டம் அதிகமுள்ள நாடுகளில் ஒன்று என்ற அவப்பெயரையும் இந்தியா பெற்றிருக்கிறது. இந்தியாவின் வேலைவாய்ப்பின்மை விகிதம் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 6.1% என்ற உச்சத்தை தொட்டிருக்கிறது. அரசு, பொதுத்துறை, தனியார் துறை என அமைப்பு சார்ந்த அனைத்து துறைகளிலும் வேலைவாய்ப்புகள் குறைந்து விட்ட நிலையில் அதை அதிகரிக்கவும், அதன் மூலம் இளைய தலைமுறையினரிடம் நம்பிக்கையை விதைக்கவும் வேண்டியது மத்திய அரசின் கடமையாகும்.

ஆனால், மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களிலேயே கிட்டத்தட்ட 10 லட்சத்திற்கும் கூடுதலான பணியிடங்களை காலியாக வைத்திருப்பது எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாத ஒன்றாகும். மத்திய அரசுப் பணியிடங்கள் இந்த அளவுக்கு காலியாக இருக்கும் நிலையில், தமிழகம் உள்ளிட்ட மாநில அரசுத் துறைகளில் 20 லட்சத்திற்கும் கூடுதலான பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. வேலையில்லாத் திண்டாட்டத்தை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் ஒருபுறமிருக்க, அரசுத்துறைகளில் காலியாக உள்ள இடங்களையும் உடனடியாக நிரப்ப வேண்டியது அவசியமாகும்.

மத்திய, மாநில அரசுத்துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நீண்டகாலமாக நிரப்பாமல் கிடப்பில் போட்டு வைத்திருப்பதன் மூலம் சமூகநீதிக்கும் பெருந்துரோகம் இழைக்கப்படுகிறது. நீண்ட காலமாக நிரப்பப்படாமல் இருக்கும் இடங்களில், ஏதேனும் ஒரு கட்டத்தில் சில இடங்கள் மட்டும் நிரப்பப்படும் போது அதில் இடஒதுக்கீடு பின்பற்றப்படுவதில்லை. இதன்மூலம் சமூகநீதி சாகடிக்கப்படுகிறது.

மத்தியில் இரண்டாவது முறையாக பதவியேற்றுள்ள நரேந்திர மோடி தலைமையிலான அரசு, நாட்டின் வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு முடிவு கட்டுவதற்கு முக்கியத்துவம் அளிக்கப் போவதாக அறிவித்து உள்ளது. அதுமட்டுமின்றி, வேலைவாய்ப்புக்காக அமைச்சரவைக் குழு ஒன்றையும் அமைத்துள்ளது. இவை வரவேற்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் ஆகும். ஆனால், இவை மட்டுமே வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்குவதற்கு போதுமானவை அல்ல. வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்க உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்வது மட்டுமே இளைஞர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தும்.

எனவே, மத்திய அரசிலும், பொதுத்துறை நிறுவனங்களிலும் காலியாக உள்ள இடங்கள் அனைத்தும் சிறப்பு ஆள்தேர்வு இயக்கத்தின் மூலம் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் நிரப்பப்பட வேண்டும். அமைப்பு சார்ந்த தனியார்துறை வேலைவாய்ப்புகளை அதிகரிக்கவும் சிறப்புத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்றும் அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Previous articleசேலம் உருக்காலையை தனியார்மயமாக்குவதற்கு திமுக எம்பி. டி.ஆர்.பாலு எதிர்ப்பு
Next articleகும்பகோணம் மாவட்டமா.? எம்.எல்.ஏ வெளியிட்ட அதிகாரபூர்வ தகவல்