வன்முறைகள் தீர்வல்ல…. தில்லியில் அமைதி திரும்ப நடவடிக்கை தேவை! மருத்துவர் ராமதாஸ் வேண்டுகோள்

Photo of author

By Ammasi Manickam

வன்முறைகள் தீர்வல்ல…. தில்லியில் அமைதி திரும்ப நடவடிக்கை தேவை! மருத்துவர் ராமதாஸ் வேண்டுகோள்

Ammasi Manickam

Dr Ramadoss asks to Complete Plastic Ban in Tamilnadu

வன்முறைகள் தீர்வல்ல…. தில்லியில் அமைதி திரும்ப நடவடிக்கை தேவை! மருத்துவர் ராமதாஸ் வேண்டுகோள்

தலைநகரான டெல்லியில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்ப்போருக்கும்,ஆதரிப்போருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இரு பிரிவினருக்கும் இடையேயான மோதல் கலவரமாக மாறி ஏதும் அறியாத பல அப்பாவிகள் அதன் மூலமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கலவரத்தை தடுத்து தலைநகரில் சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்த வேண்டும் என பாமக நிறுவனர் மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது.

தலைநகர் தில்லியில் குரியுரிமை சட்டத் திருத்தத்தை ஆதரிப்போருக்கும், எதிர்ப்போருக்கும் இடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட மோதலும், அதனால் உருவான கலவரமும் நான்காவது நாளாக இன்றும் நீடிப்பது அதிர்ச்சியும், கவலையும் அளிக்கிறது. இந்த வன்முறையில் எந்த தவறும் செய்யாத அப்பாவிகள் படுகொலை செய்யப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது; இது நிறுத்தப்பட வேண்டும்.

தில்லியில் இயல்பு நிலைமை திரும்பச் செய்வதற்காக மத்திய உள்துறை அமைச்சகம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தில்லி மாநில துணை நிலை ஆளுனர், முதலமைச்சர் மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பல்வேறு கட்ட ஆலோசனைகளை நடத்தி உள்ளார். தில்லி மாநில காவல்துறையும் சிறப்பு ஆணையராக ஸ்ரீவஸ்தவா நியமிக்கப்பட்டு உடனடியாக பொறுப்பேற்றுள்ளார். பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதுடன், கலவரக்காரர்களை கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இவ்வளவுக்கு பிறகும் கலவரம் தொடருகிறது.

தில்லி கலவரத்தில் இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளனர்.70-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். வன்முறை மூலம் எந்த பிரச்சினைக்கும் தீர்வு காண முடியாது என்பதை இரு தரப்பினரும் உணர்ந்தால் அனைத்து சிக்கல்களையும் தீர்த்து விட முடியும். இதை உணராமல் வன்முறை மற்றும் கலவரத்தை கட்டவிழ்த்து விடுபவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து, தில்லியில் அமைதியையும், சட்டம் & ஒழுங்கையும் நிலை நிறுத்த மத்திய உள்துறை அமைச்சகமும், தில்லி அரசும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.