தமிழகத்தில் ஸ்பெஷலிஸ்ட் டாக்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என டாக்டர் ராமதாஸ் எச்சரித்துள்ளார்.
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில், தமிழக அரசின் செலவில் உயர்சிறப்பு மருத்துவப் படிப்புகளை படித்த பிற மாநில மருத்துவர்கள், ஒப்பந்தப்படி தமிழ்நாட்டில் பணி செய்ய முன்வராமல் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு சென்று விட்டதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் படித்தவர்கள் மக்களுக்கு சேவை செய்யாமல் ஏமாற்றுவது கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 19 வகையான உயர்சிறப்புப் படிப்புகளில் 334 இடங்கள் உள்ளன. 2017-ஆம் ஆண்டு வரை இந்த இடங்களை தமிழக அரசுதான் நிரப்பி வந்தது. ஆனால், 2017-ஆம் ஆண்டு முதல் இந்த இடங்கள் அனைத்தையும் மத்திய அரசே எடுத்துக் கொண்டு நிரப்பி வருகிறது. அந்த இடங்களில் அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 50% இட ஒதுக்கீட்டையும் மத்திய அரசு ரத்து செய்துவிட்டது. அதனால் உயர்சிறப்பு மருத்துவப் படிப்புகளில் பெரும்பான்மையான இடங்களை பிற மாநில மருத்துவர்கள் கைப்பற்றிக் கொள்கின்றனர். அதனால் தமிழக மருத்துவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது.
அரசு மருத்துவமனைகளில் உயர்சிறப்பு மருத்துவர்களின் தேவையைக் கருத்தில் கொண்டு, தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் உயர்சிறப்பு மருத்துவம் பயிலும் மருத்துவர்கள், படிப்பை முடித்த பிறகு இரு ஆண்டுகளுக்கு தமிழக அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற வேண்டும் என்று பத்திரத்தில் எழுதி வாங்கப் படுகிறது. அதன்படி பணி செய்ய மறுக்கும் மருத்துவர்களிடமிருந்து இழப்பீடாக ரூ.40 லட்சம் வரை வசூலிக்க முடியும். ஆனால், அதை மதிக்காத பிற மாநில மருத்துவர்கள் உயர்சிறப்பு மருத்துவப் படிப்பை முடித்தவுடன் தங்கள் சொந்த மாநிலங்களுக்குச் சென்று அங்குள்ள மருத்துவமனைகளில் பணியாற்றத் தொடங்கி விடுகின்றனர்.
தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2017-ஆம் ஆண்டு டி.எம்., எம்.சி.எச் போன்ற உயர்சிறப்பு மருத்துவப் படிப்புகளில் சேர்ந்து பட்டம் பெற்ற மருத்துவர்களுக்கான வேலைவாய்ப்புக் கலந்தாய்வு கடந்த ஜூலை 30-ஆம் தேதி நடைபெற்றது. அதில் உயர் சிறப்பு மருத்துவப் பட்டம் பெற்ற 280 வெளிமாநில மருத்துவர்களில் 80 விழுக்காட்டுக்கும் கூடுதலானவர்கள் கலந்து கொள்ளவில்லை.
அதன்மூலம் அவர்கள் தமிழ்நாட்டில் வேலை செய்ய விரும்பவில்லை என்பதை தெரிவித்திருக்கின்றனர். இதே நிலை தொடர்ந்தால் அடுத்த சில ஆண்டுகளில் நரம்பியல், இதயநோய்ப் பிரிவு,புற்றுநோய், சிறுநீரகவியல் உள்ளிட்ட மருத்துவப் பிரிவுகளில் மருத்துவம் அளிக்க உயர்சிறப்பு மருத்துவர்களுக்கு தமிழகத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டுவிடும்.
உயர்சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான கட்டமைப்பு மிகச்சிறப்பாக உள்ள மாநிலம் தமிழ்நாடு தான். ஆனால், தமிழ்நாட்டில் அடுத்த சில ஆண்டுகளில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற உயர்சிறப்பு மருத்துவர்கள் கிடைக்க மாட்டார்கள் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத அநீதி ஆகும். இதற்குக் காரணம் உயர்சிறப்பு மருத்துவ மாணவர் சேர்க்கையில் கடந்த 2017-ஆம் ஆண்டில் மத்திய அரசு கொண்டு வந்த மாற்றம் தான். 2017-ஆம் ஆண்டுக்கு முன்பு வரை தமிழகத்தில் உள்ள உயர்சிறப்பு மருத்துவ இடங்கள் அனைத்தும் உள்ளூர் மருத்துவர்களைக் கொண்டு தமிழக அரசால் நிரப்பப்பட்டன.
மொத்த இடங்களில் 50% இடங்கள் அரசு மருத்துவமனைகளில் ஒரு குறிப்பிட்ட காலம் பணியாற்றிய மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டன. அவ்வாறு படித்த அரசு மருத்துவர்கள் தொடர்ந்து அரசு மருத்துவமனைகளில் பணியாற்றுவதால், அரசு மருத்துவமனைகளைப் பொறுத்தவரை உயர்சிறப்பு மருத்துவர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டதே கிடையாது.
ஆனால், இந்திய மருத்துவக் கவுன்சில் விதிகளில் 2010-ஆம் ஆண்டில் செய்யப்பட்ட திருத்தங்களின்படி உயர்சிறப்பு மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடத்தும் பொறுப்பை மத்திய அரசே எடுத்துக் கொண்டது. அகில இந்திய தரவரிசை அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டதால் 85% இடங்களை வெளிமாநில மாணவர்கள் கைப்பற்றிக் கொண்டனர். தமிழக மாணவர்களுக்கு வெகு சில இடங்களே கிடைத்தன. அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு சிறப்பு ஒதுக்கீடு இல்லை என்பதால் அவர்களின் உயர்சிறப்பு மருத்துவப் படிப்பு கனவாக மாறியது. இதைவிட கொடுமையான சமூக அநீதி இருக்க முடியாது.
தமிழ்நாடு அதன் மக்களின் வரிப்பணத்தில் அதிக மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்கி, அவற்றில் உயர்சிறப்பு மருத்துவப் படிப்புகளை நடத்துகிறது. ஆனால், அதில் தமிழ்நாட்டு மாணவர்கள் படிக்க முடியாது; பிற மாநில மாணவர்கள் தான் படிப்பர் என்பதை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும்? தமிழகத்தின் உயர்சிறப்பு மருத்துவர்கள் தேவையைக் கருத்தில் கொண்டு தான், உயர்சிறப்பு மருத்துவக் கல்விக்கான கட்டமைப்பை தமிழக அரசு உருவாக்குகிறது. அதை பிற மாநில மாணவர்களுக்கு மத்திய அரசு தாரைவார்ப்பது எவ்வகையில் நியாயம்?
இந்தியாவில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள மாநில மருத்துவர்களுக்கும் உயர்சிறப்புப் படிப்பு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் மத்திய அரசு இந்த ஏற்பாட்டை செய்திருக்கிறது. மத்திய அரசின் நோக்கம் சரியானதாக இருக்கலாம். ஆனால், கட்டமைப்பை உருவாக்கிய மாநிலங்கள் அவற்றை பயன்படுத்திக் கொள்ள முடியாதவாறு மற்றவர்களுக்கு பறித்துக் கொடுப்பதை ஏற்க முடியாது. அது பெருந்தவறு.
ஒரு வேளை மருத்துவக் கட்டமைப்பு இல்லாத மாநில மருத்துவர்களுக்கும் கல்வி வாய்ப்புகளை ஏற்படுத்தி தர வேண்டும் என்று மத்திய அரசு நினைத்தால், சம்பந்தப்பட்ட மாநிலங்களில் மருத்துவக் கட்டமைப்புகளை ஏற்படுத்த உதவவும், ஊக்குவிக்கவும் வேண்டும். மாறாக, பிற மாநிலங்களின் மருத்துவக் கட்டமைப்புகளை ஆக்கிரமிப்பது நியாயமல்ல. இந்த அநீதிக்கு முடிவு கட்ட 2017-ஆம் ஆண்டுக்கு முன்பிருந்ததைப் போன்று, தமிழ்நாட்டில் உயர்சிறப்பு மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வை நடத்தும் அதிகாரம் தமிழக அரசிடமே வழங்கப்பட வேண்டும்; 50% இடங்கள் அரசு மருத்துவர்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும். இதற்கு வசதியாக இந்திய மருத்துவக் கவுன்சில் விதிகளில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு பெறும் வகையில் புதிய சட்டத்தை தமிழக அரசு வரும் கூட்டத்தொடரில் நிறைவேற்றி, குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற வேண்டும் என டாக்டர் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.