பணத்தின் முன் புனிதமும் பாரம்பரியமும் வீழ்த்தப்பட்டதா? மருத்துவர் ராமதாஸ் எச்சரிக்கை

0
147
Dr Ramadoss Criticise DMK Leader MK Stalin-News4 Tamil Online Tamil News Channel
Dr Ramadoss Criticise DMK Leader MK Stalin-News4 Tamil Online Tamil News Channel

பணத்தின் முன் புனிதமும் பாரம்பரியமும் வீழ்த்தப்பட்டதா? மருத்துவர் ராமதாஸ் எச்சரிக்கை

வரலாற்று சிறப்புமிக்க தில்லை நடராசர் கோவிலை வணிகமயமாக்கும் முயற்சியை கண்டித்தும், அதை முறையாக நிர்வகிக்க அரசு கையகப்படுத்த வேண்டும் என்றும் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் எச்சரித்துள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.
                      
உலகப் புகழ்பெற்ற திருக்கோயில்களில் ஒன்றாக போற்றப்படுவதும், பிச்சாவரம் சோழர்களால் காலம் காலமாக நிர்வகிக்கப்பட்டு வந்ததுமான சிதம்பரம் நடராசர் கோயிலில் மிக மோசமான அத்துமீறல்கள் அரங்கேற்றப்பட்டுள்ளன. புனிதம் மிக்க சிதம்பரம்  நடராசர் கோயிலை வணிகமயமாக்கும் நோக்கத்துடன் நடராசர் கோயில் நிர்வாகம் மேற்கொண்ட அத்துமீறல்கள் கடுமையாக கண்டிக்கத்தக்கவை ஆகும்.

வரலாற்று சிறப்பு மிக்க சிதம்பரம் நடராசர் கோயிலின் ஆயிரங்கால் மண்டபத்தில் சிவகாசி பட்டாசு ஆலை அதிபரின் இல்லத் திருமணம் நேற்று முன்நாள் ஆன்மிக விதிகளை மீறியும், பல்லாயிரமாண்டு  நடைமுறைகளை மீறியும் நடத்தப்பட்டிருக்கிறது. இது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாததாகும். இது இராஜ அவை என்று போற்றப்படும் ஆயிரங்கால் மண்டபத்தின் புனிதத்தை சிதைக்கும் செயலாகும். திருமண ஏற்பாடுகள், அலங்காரம் என்ற பெயரில் நடராசர் ஆலயம் அல்லோல கல்லோலப்படுத்தப்பட்டது.  உலகப்புகழ் பெற்ற நடராசர் ஆலயத்தின் புனிதமும், மாண்புகளும் கால்களில் போட்டு மிதிக்கப்பட்டன.

சிதம்பரம் நடராசர் கோயிலின் ஆயிரங்கால் மண்டபத்திற்கு தனிச் சிறப்புகள் உள்ளன. ஆண்டுதோறும் ஆனி திருமஞ்சனம், ஆரூத்ரா தரிசனம் ஆகிய இரு விழாக்களின் போது மட்டும் தான் சிவகாமியம்மன் சமேத நடராசர் ஆயிரங்கால் மண்டபத்தில் காட்சியளிப்பார். அங்கு பல்வேறு வகையான வழிபாடுகள் நடத்தப் படும். இந்த இரு நிகழ்வுகளைத் தவிர ஆயிரங்கால் மண்டபத்தில் அனுமதிக்கப்பட்ட இன்னொரு நிகழ்வு சோழ மன்னர்களின் பதவியேற்பு விழா ஆகும். இவற்றைத் தவிர வேறு எந்த நிகழ்வுகளும்  இந்த மண்டபத்தில் அனுமதிக்கப்பட்டதில்லை. சிதம்பரம் நடராசர் கோயிலின் பல்லாயிரமாண்டு கால வரலாற்றில் ஆயிரங்கால் மண்டபத்தில் நிகழ்ச்சிகளை நடத்த பல முயற்சிகள் நடந்த போதிலும் அவை எதுவும் வெற்றி பெற்றதில்லை. இத்தகைய வரலாறு கொண்ட ஆயிரங்கால் மண்டபத்தில் பணம் கிடைக்கிறது என்பதற்காக திருமணம் நடத்த அனுமதிப்பது நடராசர் கோயிலை வணிகமயமாக்கும் செயல் ஆகும்.

ஆயிரங்கால் மண்டபத்தில் தொழிலதிபர் இல்லத் திருமணத்தை நடத்த அனுமதித்தது சர்ச்சையாகியுள்ள நிலையில், தாங்கள் அரங்கேற்றிய அத்துமீறலை மூடி மறைக்க தீட்சிதர்கள் துடிக்கின்றனர். நாட்டியாஞ்சலி நிகழ்ச்சிக்காக ஆயிரங்கால் மண்டபம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்ததாகவும், ஆலய வளாகத்திலுள்ள சிறிய கோவில்களுக்கு குடமுழுக்கு விழா நடைபெற்றதால் கோவில் வளாகத்தில் நிலவிய நெரிசலைக் கருத்தில் கொண்டு ஆயிரங்கால் மண்டபத்தில் திருமண விழாவை நடத்திக் கொள்ள அனுமதி அளிக்கப் பட்டதாகவும் தீட்சிதர்கள் தரப்பில் விளக்கம் அளிக்கப்படுகிறது. இது தமிழக அரசையும், மக்களையும், ஏமாற்றும் செயலாகும். முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் இச்செயலை எவரும் நம்ப மாட்டார்கள்.

ஆயிரங்கால் மண்டபத்தில் மின் விளக்குகள், மலர்த் தோரணங்கள் ஆகியவற்றை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் கோயில் நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டவர்கள் அல்ல, பட்டாசு ஆலை அதிபர்  குடும்பத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டவர்கள் என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. அதுமட்டுமின்றி, ஆயிரங்கால் மண்டபத்தில் நடைபெற்ற திருமண விழாவிற்கு சிறப்பு பேட்ஜ் அணிந்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். கோயில் தீட்சிதர்கள் கூறுவதைப் போன்று கடைசி நேரத்தில் தான் ஆயிரங்கால் மண்டபத்தில் திருமணம் நடத்த அனுமதிக்கப்பட்டது என்றால், மிகக்குறுகிய அவகாசத்தில் பேட்ஜ் தயாரித்து, திருமணத்திற்கு வந்தவர்கள் அனைவருக்கும் வழங்குவது எந்த வகையிலும் சாத்தியமல்ல.

சிதம்பரம் நடராசர் கோயிலில் நிகழ்த்தப்பட்ட அத்துமீறல்கள் குறித்து சுருக்கமாக கூற வேண்டுமானால் பணத்தின் முன் புனிதமும், பாரம்பரியமும் வீழ்த்தப்பட்டிருக்கின்றன என்று தான் குறிப்பிட வேண்டும். நடராசர் கோவில் நிர்வாகம் தவறானவர்களின் கைகளில் சிக்கித் தவிக்கிறது என்பதற்கு இதைவிட சிறந்த உதாரணத்தைக் கூற முடியாது. இதற்கான ஒரே பரிகாரம் கோயில் நிர்வாகத்தை மீட்டெடுத்து  சரியானவர்களின் கைகளில் ஒப்படைப்பது மட்டும் தான். அதை செய்ய தமிழக அரசு தயங்கக்கூடாது.

சிதம்பரம் நடராசர் கோயிலை யார் நிர்வகிப்பது என்பது குறித்து தமிழக அரசுக்கும், தீட்சிதர்களுக்கும் பல கட்டங்களில் சட்டப் போராட்டங்கள் நடந்துள்ளன. இதுதொடர்பான வழக்குகளில் 17.03.1890, 03.04.1939, 23.01.1940, 11.02.1997, 02.02.2009 ஆகிய நாட்களில் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்புகளில் தமிழக அரசு தான் கோவிலை நிர்வகிக்க வேண்டும்; நடராசர் கோயில் தீட்சிதர்களின் சொத்து அல்ல என்பது தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது. 2008-ஆம் ஆண்டு பிப்ரவரியில் நடராசர் கோயிலை தமிழக அரசு கையகப்படுத்தியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளில், சில தரப்பினர் சரியாக ஒத்துழைக்காததால் தான் தீட்சிதர்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கப்பட்டது. அதுமட்டுமின்றி, தீட்சிதர்கள் முறைகேடுகளில் ஈடுபட்டால் அதுபற்றி விசாரணை நடத்த தமிழக அரசு ஆணையிடலாம் என்று அந்த வழக்கில் உச்சநீதிமன்றம் ஆணையிட்டது. அந்த வகையில் இப்போதும் தில்லை நடராசர் கோயிலில் நடந்த அத்துமீறல்கள் பற்றி விசாரணை நடத்தும் அதிகாரம் தமிழக அரசுக்கு உண்டு. தேவைப்பட்டால் நடராசர் கோயிலின் நிர்வாகத்தையும் தமிழக ஆட்சியாளர்களால் கையகப்படுத்த முடியும்.

எனவே, சிதம்பரம் நடராசர் கோயிலில் நிகழ்த்தப்பட்ட அத்துமீறல் பற்றி விசாரணை நடத்த தமிழக அரசு ஆணையிட வேண்டும். அதுமட்டுமின்றி, காலம்காலமாக பிச்சாரவரம் சோழர்கள் நிர்வாகத்தில் சிதம்பரம் நடராசர் கோயில் புகழ் பெற்று விளங்கியது என்பதால், அக்கோயிலை தமிழக அரசு கையகப்படுத்தி,  அதை நிர்வகிக்க அமைக்கப்படும் அறங்காவலர் குழுவில் பிச்சாவரம் சோழர்களை சேர்க்க  வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

Previous articleபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்கிறதா இந்தியா? ராணுவ தளபதியின் அதிரடி அறிவிப்பு !
Next articleடிடிவி.தினகரன் தி.மு.க.வுடன் கூட்டணியா? அமைச்சர் வெளியிட்ட பரபரப்பு தகவல்