திராவிடல் மாடல் என்பது காலாவதியான கொள்கை – ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சனம்!!
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் தமிழக அரசுக்கும் இடையே அடிக்கடி வார்த்தை மோதல்கள் ஏற்பட்டபடி இருக்கின்றன. அந்தவகையில், ஆங்கில செய்தித்தாளுக்குப் பேட்டி அளித்துள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி, திராவிட மாடல் அரசு என்று ஒன்று இல்லை என்றும், காலாவதியான கொள்கைகளைக் கொண்டு திராவிட மாடல் என்ற அரசியல் வார்த்தைகளை பயன்படுத்துகின்றனர் என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.
ஒரே நாடு என்ற கொள்கையைப் பிரதிபலிக்காததுதான் திராவிட மாடல் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஆளுநர் மாளிகை நிதிச் செலவினங்களில் விதிமீறல் என நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியது அப்பட்டமான பொய் என ஆளுநர் ரவி கூறியுள்ளார்.
தமிழக அரசு நிறைவேற்றி அனுப்பிய சித்தா பல்கலைக் கழக மசோதா நிறுத்திவைக்கப்பட்டுள்ளது என்றும், இரண்டு முறை அனுப்பப்பட்ட மசோதாவிலும் பல்கலைக் கழக வேந்தராக முதலமைச்சர் இருப்பார் என கூறப்பட்டுள்ளது. அது விதிகளுக்கு எதிரானது என்பதால், மசோதாவை நிறுத்திவைத்துள்ளேன் என்றும் விளக்கமளித்துள்ளார்.
தமிழகக் காவல் துறை அரசியல்மயமாக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டுள்ள ஆளுநர், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தருமபுரம் ஆதினத்தை காண சென்ற தன்னுடைய வாகனத்தின் மீது தாக்குதல் நடந்ததாகவும், அதில் சம்பந்தப்பட்டவர்கள் ஆளுங்கட்சியினர் என்பதால் முதல் தகவல் அறிக்கைகூட பதிவு செய்யப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
கல்வியின் தரம் குறைந்துவிட்டதால், தமிழக மாணவர்கள் சிவில் தேர்வுகளில் வெற்றிபெறுவது குறைந்துவிட்டது என்றும், நான் அதிகாரத்தை மீறுகிறேன் என்று கூறுவது தவறான பரப்புரை என்றும் ஆளுநர் ரவி கூறியுள்ளார். தனிப்பட்ட முறையில் முதலமைச்சர் ஸ்டாலின் மீது தனக்கு மதிப்புள்ளது என்றும், அவர் சிறந்த மனிதர் என்றும் ஆர்.என்.ரவி தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.