தமிழகத்தில் உள்ள கிராமப்புற கிரிக்கெட் வீரர்களை சர்வதேச தரத்தில் உயர்த்துவதற்காக ஐபில் போன்று கடந்த நான்கு வருடங்களாக டிஎன்பிஎல் டி20 தொடரை தமிழ்நாடு கிரிகெட் சங்கம் வெற்றிகரமாக நடத்தி வருகிறது. சென்ற மாதம் தான் இந்த தொடரின் நான்காவது சீஸன் கோலகலமாக முடிந்தது.
இந்நிலையில், டிஎன்பிஎல் தொடரில் சூதாட்டம் நடைபெறுவதாக புகார் எழும்பியுள்ளது. இது சம்மந்தமாக பிசிசிஐ-யின் ஊழல் தடுப்பு பிரிவு வீரர்களிடமும் அணிகளிடமும் விசாரணை நடத்தி வருவதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிசிசிஐ ஊழல் தடுப்பு பிரிவின் தலைவர் அஜித் சிங் கூறுகையில், “அடையாளம் தெரியாத நபர்களிடம் இருந்து சூதாட்டத்தில் ஈடுபடக் கோரி தங்கள் வாட்ஸப் எண்ணிற்கு மெசேஜ் வந்ததாக சில வீரர்கள் எங்களிடம் கூறியுள்ளனர். யார் அவர்கள் என்பதை நாங்கள் விசாரித்து வருகிறோம். ஆனால் இதில் எந்த சர்வதேச வீரரும் சம்மந்தப்படவில்லை” என்றார்.
2016-ம் ஆண்டு டிஎன்பிஎல் தொடர் தொடங்கியதிலிருந்தே சூதாட்ட தரகர்கள் வீரர்களை தொடர்புகொள்ள முயற்சிப்பதாக புகார்கள் வந்தன. ஆனால் இப்போது இது பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. முதல் தர போட்டியில் விளையாடும் அதிரடி ஆட்டக்காரர் ஒருவரும், டாப்-ஆர்டரில் இறங்கும் அணுபவம் வாய்ந்த இடதுகை பேட்ஸ்மேன் மற்றும் ஒரு பயிற்சியாளர் ஆகியோர் மீது தற்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதற்கிடையே சூதாட்டப் புகார் தொடர்பான குற்றச்சாட்டுகளை கடுமையாக மறுத்த தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம், இந்த குறிப்பிட்ட புகார் தொடர்பாக விசாரிக்க குழு ஒன்றை நியமித்துள்ளது.
டிஎன்பிஎல் தொடர் மட்டுமல்லாது கர்நாடக ப்ரீமியர் லீக் மீதும் சூதாட்டப் புகார் எழுந்துள்ளது. இதனால் இதுபோன்ற தொடர்களை நடத்த பிசிசிஐ தடை விதிக்க வாய்ப்புள்ளதாக கிரிக்கெட் நிபுணர்கள் கூறுகின்றனர்.