திமுக கூட்டணியில் பாமக? தூண்டிலை போட்ட முக்கிய புள்ளி! கலக்கத்தில் அதிமுக தரப்பு
கடந்த சட்டமன்ற தேர்தல் மற்றும் மக்களவை தேர்தலில் பாமக அதிமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட்டது. இந்நிலையில் சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு நடந்த ஊராட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக பாமக அறிவித்தது. அப்போதைய சூழலில் அதிமுக மற்றும் பாமக இடையேயான கூட்டணி குறித்து இரு கட்சிகளும் வெளிப்படையாக எதையும் பகிர்ந்து கொள்ளவில்லை.
பாமக தலைவராக அன்புமணி ராமதாஸ்
இந்நிலையில் பாமக தலைவராக அன்புமணி ராமதாஸ் பதவியேற்ற பிறகு மாவட்டம் தோறும் சுற்று பயணம் செய்து கட்சி நிர்வாகிகள்,தொண்டர்கள் மற்றும் பொதுமக்களை சந்தித்து வருகிறார். இது கட்சியினர் மத்தியில் புது உத்வேகத்தை கொடுத்துள்ளது.இந்த சுற்றுபயணத்தின் போது பேசிய அன்புமணி ராமதாஸ் பாமக தலைமையில் தான் கூட்டணி என்றும், அதற்கேற்றவகையில் தான் மக்களவை கூட்டணி அமையும் என்று பேசி வருகிறார்.

அதே நேரத்தில் இந்த முறை பாமக திமுகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதாகவும் செய்திகள் வெளியாகி வருகிறது. அதை சற்றே உறுதி செய்யும் வகையிலே தான் பாமகவின் செயல்பாடுகளும் அமைந்துள்ளது.திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அக்கட்சியின் மீதோ அல்லது ஆட்சி குறித்தோ பாமகவின் தரப்பில் விமர்சனம் எதுவும் வைக்கப்படவில்லை.
அதே நேரத்தில் திமுக கூட்டணியில் விசிக இருக்கும் சூழலில் பாமக அந்த கூட்டணிக்கு வருமா? அப்படி வந்தால் விசிக திமுக கூட்டணியில் தொடருமா? உள்ளிட்ட பல்வேறு சந்தேகங்கள் அரசியல் ஆர்வலர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
திமுக மற்றும் பாமக இடையேயான கூட்டணி
இதுவரை திமுக மற்றும் பாமக இடையேயான கூட்டணி அமையுமா இல்லையா என்பது குறித்து இரு தரப்பினரும் கருத்து தெரிவிக்காத நிலையில் திமுக கூட்டணியிலிருந்து பாமகவுக்கு முதல் அழைப்பு வந்துள்ளது.திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மதிமுகவிடமிருந்து தான் இந்த அழைப்பு வந்துள்ளது.
இதுகுறித்து “மதவாத சக்திகளுக்கு எதிரான கூட்டணியில் பாமக இணைந்தால் தனக்கு மகிழ்ச்சி” என மதிமுக தலைமைக் கழகச் செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.
மதிமுக தலைமைக் கழகச் செயலாளர் துரை வைகோ
பாமகவில் அன்புமணி ராமதாஸ் தலைவராக பதவியேற்றது போல மதிமுகவில் தலைமைக் கழகச் செயலாளராக துரை வைகோ பதவியேற்றுள்ளார். பதவியேற்ற பிறகு அவர் தொடர்ந்து அரசியலில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
மதிமுக தலைமைக் கழகச் செயலாளராக துரை வைகோ பொறுப்பேற்ற பிறகு கட்சியை பலப்படுத்தும் வகையில் தொடர்ந்து சுற்றுப்பயணத்தில் இருந்து வருகிறார். அந்த வகையில் மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் கட்சியினர் இல்ல விழாவில் கலந்து கொண்டார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது, மத உணர்வுகளை யாராக இருந்தாலும் புண்படுத்தக் கூடாது என்பது வைகோவின் நிலைப்பாடு என்று தெரிவித்தார்.

வைகோவை பொறுத்தவரை அவர் ஒரு பகுத்தறிவாளர் என்றும் மதவாத சக்திகள் சிலர் அவர் கோயிலுக்கு சென்றதை தவறாக சித்தரிப்பதாகவும் இது அநாகரீக செயல் என்றும் துரை வைகோ அப்போது தெரிவித்தார். மேலும், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது குறித்த கேட்ட கேள்விக்கு தனக்கு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் எண்ணமோ திட்டமோ கிடையாது என்றும் இயக்கத்தின் தொண்டர்களும், நிர்வாகிகளும் நிர்பந்தித்தால் அதை ஏற்கும் நிலையில் இருப்பதாகவும் அவர் கூறினார்.
மேலும் திமுக பாமக கூட்டணி குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர் மதவாத சக்திகளுக்கு எதிரான கூட்டணியில் பாமக இணைந்தால் தனக்கு மகிழ்ச்சி எனவும் பாமக மட்டுமல்ல மதச்சார்பற்ற கூட்டணியில் வேறு எந்த இயக்கம் இணைந்தாலும் தாம் வரவேற்பதாகவும் அவர் தெரிவித்தார்.
பரபரப்பான தமிழக அரசியலில் துரை வைகோவின் இந்தக் கருத்து முக்கியத்துவம் வாய்ந்த்தாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே திமுக கூட்டணியை நோக்கி பாமக நகர்வதாக ஒரு பேச்சு எழுந்துள்ள நிலையில் துரை வைகோவின் இந்தக் கருத்து அதிமுக தரப்பை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.