தெற்கு துருக்கியில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஆனால் இதுவரை சேதாரங்கள் மற்றும் உயிரிழப்புகள் குறித்து விபரங்கள் எதுவும் வெளியாகவில்லை.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் துருக்கி மற்றும் சிரியா நாட்டின் எல்லையில் உள்ள காசியான்டெப் மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கி மற்றும் சிரியா வரலாற்றில் ஏற்பட்ட மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களில் இதுவும் ஒன்றாகும். ரிக்டர் அளவில் சுமார் 7.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர். பல லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடு வாசல்களை இழந்து வீதிகளில் நிற்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
அதன் பாதிப்பில் இருந்து மீண்டு வருவதற்குள் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டு மக்களை அச்சத்தில் ஆழ்த்தி வருகிறது. கடந்த அக்டோபர் 16-ஆம் தேதி கிழக்கு துருக்கியில் மலாத்தியா மாகாணத்தில் உள்ள காலே நகரில் காலை 10:46 மணியளவில் சுமார் 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த பாதிப்பு முடிவடைவதற்குள் அடுத்த ஒரு வாரத்திற்குள் துருக்கியில் உள்ள தெற்கு மாகாணமான அதானாவில் 5.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனால் பெரும் அச்சமடைந்த பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். இந்த தகவலை துருக்கி பேரிடர் மற்றும் அவசர மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. கோசன் மாவட்டத்தில் சுமார் 20.13 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள், வீடுகள் குலுங்கின.
ஆனால் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் உயிரிழப்புகள் குறித்த எந்தவித தகவலும் இதுவரை வெளியாகவில்லை.