இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கம்! இனி தொடர்கதை நிகழ்வாகிறதா? பீதியில் மக்கள்!
இன்று காலை தஜிகிஸ்தான் நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவாகியுள்ளது.
இந்தியாவை சுற்றியுள்ள அண்டை நாடுகளில் தற்போது அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்பட்ட வண்ணம் உள்ளன. கடந்த இரண்டு மாதங்களில் இந்தியாவை சுற்றியுள்ள நாடுகளில் சுமார் பத்து முறைக்கு மேல் நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. ரிக்டர் அளவில் 4.0 முதல் 6.8 ரிக்டர் வரை பதிவாகியுள்ளன. இந்தத் தொடர் நில நடுக்கங்கள் ஒரு மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்படுவதற்கான அறிகுறிகளாக இருக்கலாம் என புவியியல் விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதன் தொடர் நிகழ்வாக ஆப்கானிஸ்தான் அருகே உள்ள தஜிகிஸ்தானில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தஜிகிஸ்தானின் நோவாபோடே நகரில் இன்று மார்ச் 23 நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நகரில் இருந்து சுமார் 51 கிலோ மீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கமானது பூமியின் அடி ஆழத்தில் 5.6 கிலோமீட்டர் ஆழத்திலும், 5.9 ரிக்டர் அளவிலும் பதிவாகியுள்ளது. எனினும் இன்னும் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல்கள் எதுவும் தெரியவில்லை.
இதே போல் நேற்று ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் மலைகளில் மையமாகக் கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் பாகிஸ்தானில் பாதிப்பை ஏற்படுத்தி 11 பேர் உயிரிழந்த சம்பவம் நடந்து ஒரு நாள் முடிவடைவதற்குள் அடுத்த நிலநடுக்கம் அண்டை நாட்டில் ஏற்பட்டுள்ளது பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
துருக்கி மற்றும் சிரியா நாட்டின் எல்லையில் கடந்த மாதம் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 50000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பல லட்சம் மக்கள் வீடு வாசல்களை இழந்து கடுமையாக பாதிக்கப்பட்டனர். துருக்கி மற்றும் சிரியாவின் நிலநடுக்க மீட்பு பணியில் சர்வதேச நாடுகளும் முழுமையாக இறங்கி பணியாற்றின.
துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட பயங்கரமான நிலநடுக்கத்தை தொடர்ந்து பல்வேறு நாடுகள் தொடர்ந்து நிலநடுக்கங்களை எதிர்கொண்டு வருகின்றன. இதனால் மக்கள் கடும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.