வருகிற 2026 சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுக – பாஜக கூட்டணி உறுதியாகியிருக்கிறது. ஏற்கனவே, 2021 சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் இணைந்து அதிமுக தேர்தலை சந்தித்தது. ஆனால், அந்த தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தது. அதன்பின் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை அதிமுக தலைவர்களை விமர்சித்ததால் கோபப்பட்ட பழனிச்சாமி பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக அறிவித்தார்.
அதன்பின் பாஜகவுடன் இனி எப்போதும் கூட்டணி இல்லை என தொடர்ந்து சொல்லி வந்தார். ஆனால், மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி அமைந்தது, டெல்லி, மகராஷ்டிரா போன்ற மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றது போன்ற காரணங்களால் பழனிச்சாமியின் மனநிலை மாறியது. ஒருபக்கம், விஜயுடன் கூட்டணி வைக்கலாம் என்றால் அவர் அதிக தொகுதிகள், துணை முதல்வர் பதவி கேட்பதோடு விஜயின் தலைமையில்தான் கூட்டணி என கண்டிஷன் போட்டதும் பழனிச்சாமி பாஜக பக்கம் போனார். எந்த கட்சியுடன் ‘இனிமேல் கூட்டணி இல்லை’ என சொன்னாரோ அதே கட்சியுடன் இப்போது இணைந்துவிட்டார்.
ஆனால், பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்ததில் சில அதிமுக எம்.எல்.ஏக்கள் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. எனவே, அவர்களை சரிகட்டும் முயற்சியில் பழனிச்சாமி இறங்கி இருக்கிறார். ஏற்கனவே, வருகிற ஏப்ரல் 25ம் தேதி அதிமுக தலைமை அலுவகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், இன்று இரவு அடையார் பசுமை வழிச்சாலையில் உள்ள பழனிச்சாமியின் வீட்டில் அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு இரவு விருந்து அளிக்கப்பட்டு வருகிறது. சிக்கன், மட்டன் பிரியாணி, மீன், முட்டை, இறால் என 6 வகை அசைவ உணவுகளுடன் இந்த விருந்து அளிக்கப்பட்டிருக்கிறது.