முதல்வர் பதவியில் நீடிக்க வகுத்த அதே வியூகத்தை மீண்டும் கையிலெடுக்கும் எடப்பாடி பழனிச்சாமி!

Photo of author

By Sakthi

கொங்கு மண்டலத்தில் எப்போதுமே அதிமுக மிகப்பெரிய சக்தியாக திகழ்ந்து வருகிறது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருந்தபோதும் சரி, தற்போதும் சரி, கொங்கு மண்டலத்தில் அதிமுக மிகப்பெரிய செல்வாக்குடன் இருந்து வருகிறது.

அந்த வகையில் தற்போது அதிமுகவுக்கு ஒற்றை தலைமை என்ற என்ற விவகாரத்தில் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு பெருகி வருகிறது. அதிமுகவுக்கு புதிய பொதுச் செயலாளரை தேர்ந்தெடுத்து ஒற்றை தலைமையை ஏற்படுத்தும் நோக்கத்துடன் நாளைய தினம் அந்த கட்சியின் பொதுக்குழு சென்னை வானகரத்திலுள்ள தனியார் மண்டபத்தில் கூடவுள்ளது.

இந்த பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளராக முன்னாள் முதலமைச்சர் மற்றும் இந்நாள் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்படுவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்படலாம் என்று சொல்லப்படுகிறது.

ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு சசிகலா சிறைக்கு செல்லும் முன்பு பழனிச்சாமியை முதலமைச்சராக நியமனம் செய்தபோது அவர் அந்தப் பதவியை அடைவதற்கு கொங்கு மண்டலத்திலுள்ள அமைச்சர்கள், சட்டசபை உறுப்பினர்கள், மட்டுமல்லாமல் பல்வேறு தொழிலதிபர்களும், பலர் விதங்களில் உதவி செய்தார்கள். தற்போது அவர் கட்சி பதவியை கைப்பற்றவும் அதே கூட்டணி களமிறங்கியிருக்கிறது என்று சொல்லப்படுகிறது.

அதிலும் குறிப்பாக எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்தபோது ஆட்சியையும், கட்சியையும், தக்க வைப்பதற்கு முன்னாள் அமைச்சர்கள் வேலுமணியும், தங்கமணியும், அவருக்கு மிகப்பெரிய பலமாக இருந்து வந்தார்கள்.

அதற்கேற்றவாறு தமிழக அரசியல் வரலாற்றில் முன்பு எப்போதும் இல்லாத அளவில் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு கொங்குமண்டலம் மிகவும் கவனம் பெற்று விளங்கியது.

முதலமைச்சர் முக்கிய துறைகளின் அமைச்சர்கள் என்று பலரும் கொங்கு மண்டலத்தை சேர்ந்தவர்களாக. ஒரே சமுதாயத்தைச் சேர்ந்தவர்களாக காணப்பட்டனர். சென்ற சட்டசபை தேர்தலில் அதிமுக கொங்கு மண்டலத்தில் 40க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்றது.

தற்போதும் கூட எடப்பாடி பழனிச்சாமி பொதுச்செயலாளர் ஆவதற்கு கொங்கு மண்டலத்திலிருந்து தொடர்ந்து ஆதரவு குரல்கள் அதிகரித்து வருகின்றன. ஈரோடு மற்றும் திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பழனிச்சாமிக்கு ஆதரவாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது.

கோயமுத்தூர், நீலகிரி, உள்ளிட்ட மாவட்டங்களில் இருக்கின்ற 10 அதிமுகவின் சட்டசபை உறுப்பினர்களும் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாகவே இருக்கிறார்கள்.

இந்த மாவட்டங்களில் உள்ள சட்டசபை உறுப்பினர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் எல்லோருமே வேலுமணியின் முழு கட்டுப்பாட்டில் இருப்பதால் கட்சியின் கீழ் மாவட்ட நிர்வாகிகள் தரப்பில் கூட பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக யாருமே இல்லை.

இதன் காரணமாக, பழனிச்சாமியை பொதுச்செயலாளர் ஆக்குவதற்கு கொங்கு மண்டலம் முழுவதுமிருக்கின்ற அதிமுகவைச் சேர்ந்தவர்கள் ஒருமித்த குரலுடன் ஆதரித்து வருகிறார்கள்.