பொன்னையனை திருப்தி படுத்த புதிய பதவி கொடுத்தார் எடப்பாடி பழனிச்சாமி.
தமிழகத்தில் உள்ள மாநிலங்களவைக்கான உறுப்பினர் பதவிக்கு 6 இடங்கள் காலியாக உள்ளது. இதற்காக திமுக மற்றும் அதிமுக சார்பில் தலா 3 வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் திமுக சார்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் நேற்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்தனர். நேற்றய தினமே அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலும் அறிவிக்கப்பட்டது.
அதில் அதிமுகவின் கே.பி.முனுசாமி, தம்பிதுரை மற்றும் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் உள்ளோட்டோர் இடம் பெற்றிருந்தனர். இதனால் அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக புறக்கணிக்கப் பட்டுள்ளதாக பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்த நிலையில் கூட்டணியில் உள்ள காரணத்திற்காகவே அனைத்து கட்சிக்கும் இடம் அளிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்ற கருத்தும் அதிமுக சார்பில் தெரிவிக்கப்பட்டது.
அதிமுக பிளவுபட்டபோது பன்னீர் செல்வம் அணியில் இருந்து வழிநடத்திச் சென்றவர் கே.பி.முனுசாமி அவர்கள். ஏற்கனவே மாநிலங்களவை உறுப்பினராக உள்ள தம்பிதுரைக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சி.பொன்னையன் அவர்களுக்கு மாநிலங்களவை உறுப்பினர் இடம் கொடுக்காதற்காக அவரை திருப்தி படுத்தும் நோக்கில் அவருக்கு மாநில திட்டக்குழு துனைத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான அறிவிப்பை திட்டம் மற்றும் சிறப்பு முயற்சிகள் கூடுதல் தலைமை செயலாளர் ஜெயஹீ ரகுநாதன் திங்கள் கிழமை வெளியிட்டார்.
மாநிலங்களவை பதவி கொடுக்காததால் கட்சியில் பிரச்சனை ஏற்படும் என்பதை கருத்தில் கொண்டு முன்னாள் அமைச்சர் பொன்னையன் அவர்களுக்கு திட்டக்குழு துனைத்தலைவர் பதவி அளிக்கப்படுள்ளதாக பல்வேறு அரசியல் விமர்சகர்களும் கருத்து தெரிவிக்கின்றனர்.