அதிமுகவின் பொதுக்குழு தீர்ப்புக்கு பிறகு அதிமுக தலைமை அலுவலகத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி நாளை செல்ல உள்ளதாக அதிமுகவின் தலைமை கழகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அதிமுக தலைமை அலுவலகம் சார்பாக வெளியாகியிருக்கின்ற அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக இடைக்கால பொதுச் செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான தமிழக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் செப்டம்பர் மாதம் 8ம் தேதியான நாளைய தினம் காலை 10 மணியளவில் தலைமை கழகம் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மாளிகைக்கு வருகை தந்து தலைமை கழக வளாகத்தில் இருக்கின்ற கழக நிறுவனத் தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர், இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா, உள்ளிட்டோரின் திருவுருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தவுள்ளார் ,என்று கூறப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் தலைமை கழக செயலாளர் மாவட்ட கழக செயலாளர் கழக நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள் உள்ளிட்டோர் பெருந்திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.